ராகுல் காந்தி பாகிஸ்தானிலிருந்து வந்தவரா என அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டதாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
ராகுல் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாரா இல்லை பாகிஸ்தானிலிருந்தா? அமெரிக்கர்கள் கேட்பதாக அமெரிக்க பத்திரிக்கை செய்தி
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்க மக்கள் ராகுல் காந்தியைப் பார்த்து அவர் இந்தியரா அல்லது பாகிஸ்தானியா எனக் கேட்பதாக சான் பிரான்சிஸ்கோ பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது என நாளிதழில் வெளியான செய்தியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ராகுல் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாரா இல்லை பாகிஸ்தானிலிருந்தா?
அமெரிக்கர்கள் கேட்பதாக அமெரிக்க பத்திரிக்கை செய்தி pic.twitter.com/cB9onTn2Sl
— Krishnaraj (@Krishna73674119) June 21, 2023
உண்மை என்ன ?
அமெரிக்க பத்திரிகையில் ராகுல் காந்தி குறித்து வெளியான செய்தி எனப் பரவும் புகைப்படத்தை ஆய்விற்கு உட்படுத்தினோம். அந்த செய்தியில் உள்ள எழுத்துருக்களின் அளவு (Font size), வடிவமைப்பு போன்றவை சீரற்றதாக இருப்பதைக் காண முடிந்தது.
அந்த செய்தியின் வடிவமைப்பைப் பார்க்கையில் அது கூகுள் லென்ஸ் உதவியுடன் மொழிபெயர்க்கப்பட்டது போல உள்ளது. அதனைத் தொடர்ந்து பரவக் கூடிய செய்தியின் தலைப்பைக் கொண்டு இணையத்தில் தேடினோம். அப்படி எந்த ஆங்கில செய்தியும் கிடைக்கவில்லை.
மேலும் பரவக் கூடிய செய்தியின் தலைப்பிற்குப் பக்கத்தில் இந்தி எழுத்து வடிவம் உள்ளது. இதனைக் கொண்டு ஆங்கிலத்தில் உள்ள தலைப்பினை கூகுள் மூலம் இந்திக்கு மொழி மாற்றம் செய்து, அந்த வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.
अमेरिकी पूछ रहे हैं की राहुल भारत के है या पाकिस्तान को???
प्रश्न तो सही है।।।। pic.twitter.com/dat5ZMDGmM— Vivek Pandey (@INDVivekPandey_) June 5, 2023
ராகுல் காந்தி பற்றி ஆங்கிலத்தில் பரவக் கூடிய அதே செய்தியை இந்தியில் ‘விவேக் பாண்டே’ என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எழுத்துருக்களின் அளவும், செய்தித்தாளின் வடிவமைப்பும் சீராக இருப்பதைக் காண முடிகிறது. இவற்றில் இருந்து இந்த படத்தினைதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சான் பிரான்சிஸ்கோ செய்தியில் வந்ததாகப் பரப்பி வந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
இந்தியில் உள்ள அச்செய்தி எந்த பத்திரிகையில் வெளியானது எனக் கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் ஆங்கில பத்திரிகையில் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : அமெரிக்கா சென்ற ராகுல் காந்தியை அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததாகப் பரவும் போலி ட்வீட் !
ராகுல் காந்தி குறித்து பரவிய பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : ராகுல் காந்தியின் பேச்சில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை வைத்து பல பொய்களைப் பரப்பும் Poli Talk’s !
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தியை இந்தியாவிலிருந்து வந்தவரா அல்லது பாகிஸ்தானிலிருந்து வந்தவரா என அமெரிக்கர்கள் கேட்பதாக சான் பிரான்சிஸ்கோ பத்திரிகையில் வெளியானதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அது இந்தி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை மொழிப்பெயர்ப்பு செய்து அமெரிக்க பத்திரிகை என தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.