ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

பரவிய செய்தி
அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பிளையிங் கிஸ் கொடுத்த ராகுல். கண்ணியமற்ற முறையில் நடந்த பெயில் அவுட் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பாஜக பெண் எம்பிக்கள் புகார். விரைவில் நடவடிக்கை உண்டு.
மதிப்பீடு
விளக்கம்
கேரளா வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற பெயர் குறித்து அவதூறான கருத்து பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு அளிக்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பினை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கீழமை நீதிமன்றம் கூறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் மக்களவை உறுப்பினரானார்.
இந்நிலையில் அவர் பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்தும், அங்குப் பிரதமர் மோடி செல்லாதது குறித்தும் கேள்வி எழுப்பி உரையாற்றினார். அவர் பேசிவிட்டு அமரும் போது ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு Flying kiss(பறக்கும் முத்தம்) கொடுத்ததாகவும், இது பற்றி பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் அளித்த புகார் மனுவில், ‘வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பார்த்து அநாகரிகமாகவும், தகாத செய்கையும் செய்துள்ளார். அவரது இச்செயல் அவையிலிருந்த பெண்களின் மாண்பை மட்டும் இல்லாமல், அவையின் கண்ணியத்தையும் கெடுத்துள்ளதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்படும் ‘Sansad TV’ யூடியூப் பக்கத்தில் ஆய்வு செய்ததில் ராகுல் காந்தி பேசிய வீடியோ கிடைத்தது. சுமார் 37 நிமிடம் கொண்ட அவரது உரையின் கடைசி சில வினாடிகளுக்கு முன்னதாக அவர் சபாநாயகர் இருக்கும் பக்கம் திரும்பி எதோ சைகை செய்கிறார்.
ராகுல் காந்தி சைகை செய்யும் இடத்திற்கு நேராக அமைச்சர் ஸ்மிருதி இரானி அமர்ந்திருக்கவில்லை. ராகுல் காந்திக்கு இடது பக்கம் வேறு திசையில் அவர் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இதிலிருந்து ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை பார்த்து எந்த சைகையும் செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.
இது குறித்து ஸ்மிருதி இரானி கூறியதாக ANI டிவிட்டரில் பதிவிட்ட செய்தியில் ‘நான் ஒரு விஷயத்தை எதிர்க்கிறேன். எனக்கு முன் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் உறுப்பினர்கள் அமரும் பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுக்க, பெண் வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே முடியும். பாராளுமன்றத்தில், இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை, நாட்டின் பாராளுமன்றத்தில் இதற்கு முன் பார்த்ததில்லை…’ என்று கூறியதாக உள்ளது.
#WATCH | Union Minister and BJP MP Smriti Irani says, “I object to something. The one who was given the chance to speak before me displayed indecency before leaving. It is only a misogynistic man who can give a flying kiss to a Parliament which seats female members of Parliament.… pic.twitter.com/xjEePHKPKN
— ANI (@ANI) August 9, 2023
ANI செய்தியில் எந்த ஒரு இடத்திலும் ராகுல் காந்தி தன்னை (ஸ்மிருதி இரானி) நோக்கி Flying kiss கொடுத்தார் என்றில்லை. ஆனால், பாஜக எம்.பி-க்கள் அளித்த புகாரில் அவ்வாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த புகார் மனுவில் பாஜகவைச் சேர்ந்த பல்வேறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில் நடிகையும், எம்பியுமான ஹேம மாலினியும் ஒருவர். அவரிடம் இந்தியா டுடே செய்தியாளர் Flying Kiss கொடுத்ததாகக் கூறுகிறார்களே என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அதற்கு, “நான் அதைப் பார்க்கவில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சரியில்லை” எனப் பதிலளிக்கிறார். ஆனால், எதன் அடிப்படையில் புகார் மனுவில் கையெழுத்திட்டார் என்பது தெரியவில்லை.
இதற்கு முன்னர் 2018ம் ஆண்டு ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில் பிரதமர் மோடியைக் கட்டித்தழுவி பின்னர் கண் அடித்தார். அப்போதும் இதே போன்று மோடியை ராகுல் காந்தி கட்டி தழுவியது தவறு, கண்ணடித்தது அவை மாண்பைக் குலைத்துவிட்டது என்றும் பேசு பொருளாக்கினர்.
அவ்வாறே தற்போதும் மணிப்பூர் பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் இப்படி ஒரு விவாதத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர் ஸ்மிருதி இரானியை பார்த்து எந்த சைகையும் செய்யவில்லை என்பதை வீடியோவில் காண முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பார்த்து Flying kiss(பறக்கும் முத்தம்) கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை அல்ல. அந்த திசையிலேயே ஸ்மிருதி இரானி இல்லை என்பதை அறிய முடிகிறது.