அமெரிக்கா சென்ற ராகுல் காந்தியை அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததாகப் பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி
ராகுல் காந்தியை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம். ஆனால் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டுள்ளது. அதற்காக எப்போது வேண்டுமானாலும் திறந்த வெளியில் மலம் கழிக்க என் நாட்டிற்கு வரலாம் என்று அர்த்தம் கிடையாது. – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மதிப்பீடு
விளக்கம்
கடந்த மே 30 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பத்து நாள் அமெரிக்க பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் அரசியல் குறித்தும், இந்திய ஜனநாயகம் குறித்தும் கலந்துரையாடினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளதாகக் கூறி அவருடைய ட்வீட் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Pappu 🤣🤣🤣 pic.twitter.com/IvRQs28r2e
— RAM 🇮🇳 (@thathanow) June 1, 2023
Is this true ? Anyone else seen this ? pic.twitter.com/BLPCHuqc7i
— #A Proud Indian Hindu🇮🇳 #A Proud Iyer 🇮🇳 (@anexcommie) June 2, 2023
அப்பதிவில், “ராகுல் காந்தியை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம். ஆனால் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டுள்ளது. அதற்காக எப்போது வேண்டுமானாலும் திறந்த வெளியில் மலம் கழிக்க என் நாட்டிற்கு வரலாம் என்று அர்த்தம் கிடையாது” என்றுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் ட்வீட் குறித்து அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த மே 31 அன்று அவர் பதிவிட்ட 4 பதிவுகளில், சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற பதிவு எதுவும் காணப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் அவர் ராகுல் காந்தியைப் பற்றி ட்வீட் செய்திருந்தால் அல்லது அதை நீக்கியிருந்தால் ஊடகங்கள் அது குறித்து செய்திகள் வெளியிட்டிருக்கும். ஆனால் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் அதிபர் பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் லிங்கை உள்ளீடு செய்து Wayback Machine -இல் தேடியபோது, அத்தகைய ட்வீட் எதுவும் காப்பகப்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய முடிந்தது. மேலும் மே 30, 31 மற்றும் ஜூன் 1 போன்ற தேதிகளிலும் பதிவுகளை சரிபார்த்ததில், இந்தத் தேதிகளிலும் இதுபோன்ற பதிவுகள் எதுவும் சேமிக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிந்தது.
அவர் பதிவை நீக்கிவிட்டாரா என்பது குறித்து Social Blade-ஐப் பயன்படுத்தி அதிபர் ஜோ பைடனின் பதிவுகளை சரிபார்த்ததில், அந்த தேதியில் எந்த ட்வீட்டும் நீக்கப்படவில்லை என்பதைக் கண்டறிய முடிந்தது.
இதன் மூலம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ட்வீட் பதிவு, எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : 2001ல் அமெரிக்காவில் ராகுல் காந்தி போதைப்பொருள் வைத்திருந்ததால் கைது எனப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க : ராகுல் காந்தி வெளிநாடுகளில் ‘ராகுல் ராஜீவ் பெஃரோஸ்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் படம் !
முடிவு:
நம் தேடலில், அமெரிக்கா சென்ற ராகுல் காந்தியை அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததாகப் பரவி வரும் ட்வீட் பதிவு போலியானது என்பதை அறிய முடிகிறது.