மோடி ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 6 மாதத்திற்கு முன்பாக இங்கிலாந்து சென்று பிபிசி தயாரிப்பாளரைச் சந்தித்துள்ளார் என்றும், இதனைத் தொடர்ந்தே பிரதமர் மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது என ராகுல் காந்தி வெளிநாட்டினர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஜனவரி 17ம் தேதி பிபிசி நிறுவனம் ‘India: The Modi Question’ என்ற தலைப்பில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு இந்திய அரசு தடை விதித்தது. பாஜக அரசின் இத்தகைய போக்கினை கண்டித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படத்தினை திரையிட்டு வருகின்றனர். மறுபுறம் பாஜக ஆதரவாளர்களோ ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது சரிதான் எனப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி பிபிசி தயாரிப்பாளரைச் சந்தித்ததின் அடிப்படையில்தான் மோடி குறித்த ஆவணப்படம் எடுக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம்.
2022, மே 25ம் தேதி, ‘The Tribune India’ என்ற இணையதளத்தில் ஜெரோமின் கார்பினை ராகுல் காந்தி சந்தித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதில், பரவக்கூடிய புகைப்படம் உள்ளது.
அந்த சந்திப்பு நிகழ்ந்தபோதே, இங்கிலாந்தின் முன்னாள் தொழிலாளர் கட்சியின் தலைவரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெரோமின் கார்பின் இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரானவர் என்றும், அவரை ராகுல் காந்தி சந்தித்தது கண்டனத்திற்குரியது என்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ‘இந்தியா டுடே’ யூடியூப் பக்கத்திலும், 2022, மே 24ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இப்புகைப்படம் ‘இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்’ டிவிட்டர் பக்கத்தில் கடந்த மே 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நமது தலைவர் சாம் பித்ரோதா ராகுல் காந்தியுடன் லண்டலில்” என உள்ளது.
Our chairman @sampitroda with @RahulGandhi in London 🥰 pic.twitter.com/veyWjx1bpL
— Indian Overseas Congress (@INCOverseas) May 23, 2022
ஜெரோமின் கார்பியின் புகைப்படத்தினை, பிபிசி தயாரிப்பாளர் என சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அதன் உண்மைத் தன்மை பற்றி சாம் பித்ரோதா டிவீட் செய்துள்ளார். அப்பதிவில், “இந்த புகைப்படத்தில் முதலில் இருப்பது ராகுல் காந்தி, நடுவில் இருப்பது எனது நண்பர் ஜெரோமின் கார்பின், மற்றும் நான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
And here is the same @jeremycorbyn with our @PMOIndia @narendramodi. pic.twitter.com/1RAv0ca2f1
— Sam Pitroda (@sampitroda) January 25, 2023
அது மட்டுமின்றி, ஜெரோமின் கார்பினை பிரதமர் மோடி சந்தித்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதிலிருந்து ராகுல் காந்தியுடன் பரவக்கூடிய புகைப்படத்தில் இருப்பது பிபிசி தயாரிப்பாளர் அல்ல என்பது தெரிய வருகிறது.
மேலும் படிக்க: பிபிசியின் மோடி ஆவணப்படத்திற்கு எதிராக பிரிட்டன் மக்கள் போராட்டம் எனப் பரவும் தவறான வீடியோ !
இதேபோல, மோடி குறித்த ஆவணப்படம் வெளியிட்ட பிபிசியின் தலைமை அலுவலகம் முன்பாக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்றை பாஜகவினர் பரப்பினர். அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தி பிபிசி தயாரிப்பாளரை 6 மாதத்திற்கு முன்பாக சந்தித்தார் எனப் பரவும் புகைப்படத்தில் இருப்பது பிபிசி தயாரிப்பாளர் அல்ல. அவர், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரோமின் கார்பின் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.