நேபாள இரவு விருந்து வீடியோவில் ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் சீனத் தூதர் எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நேபாளம் நாட்டிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்தில் கலந்து கொண்ட வீடியோ இந்திய அளவில் பாஜவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அந்த விருந்தின் வீடியோவில் ராகுல் காந்தி உடன் இருக்கும் பெண் நேபாள நாட்டிற்கான சீனத் தூதர ஹோவ் யாங்கி என்றும், ராகுல் காந்தி விருந்தில் யாங்கி உடனே அதிக நேரம் இருந்ததாக நேபாளத்தின் காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டதாகவும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறனர்.
உண்மை என்ன ?
ராகுல் காந்தி நேபாளம் நாட்டிற்கு சென்று அங்கு இரவு விருந்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து சர்ச்சையாகியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத்துறை தலைவர் ரந்தீப் சுர்ஜோவாலா, ” ராகுல் காந்தி தனது நண்பரின் திருமண விழாவில் பங்கேற்க தனிப்பட்ட முறையில் நேபாளத்திற்கு சென்றுள்ளார் ” என விளக்கம் அளித்தார்.
ராகுல் காந்தி தனது தோழியான, சிஎன்என் இன்டர்நேஷனலின் டெல்லியை மையமாகக் கொண்ட நிரூபராக இருந்த சும்னிமா உதாசின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காத்மாண்டுவிற்கு சென்றுள்ளார். இவர் மியான்மருக்கான முன்னாள் நேபாள தூதர் பீம் உதாசின் மகள் ஆவார்.
சும்னிமா உதாசின் திருமணத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி காத்மாண்டு வந்தடைந்ததாக மே 2-ம் தேதி தி காத்மாண்டு போஸ்ட் செய்தி மட்டுமே வெளியிட்டு இருந்தது. வைரல் தகவலில் கூறுவது போல், ராகுல் காந்தி சீனத் தூதர் ஹோவ் யாங்கி உடன் இரவு விருந்தில் பங்கேற்றதாக தி காத்மாண்டு போஸ்ட் எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
மாறாக, தி காத்மாண்டு போஸ்ட் உடைய மூத்த பத்திரிக்கையாளர் அனில் கிரி, ” ராகுல் காந்தி மணமக்களின் நண்பர்களுடன் பப்பில் இருந்தார். அந்த பெண் நிச்சயம் சீனத் தூதர் அல்ல. மணப்பெண்ணின் தரப்பில் இருந்து வந்த அவர் ஒரு நேபாளி பெண் ” என இந்தியா டுடே செய்திக்கு தெரிவித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், தோழியின் திருமணத்திற்காக நேபாளம் சென்ற ராகுல் காந்தி கலந்து கொண்ட இரவு விருந்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவருடன் இருப்பது சீனத் தூதர் ஹோவ் யாங்கி எனப் பரவும் தகவல் வதந்தி, அவர் மணப்பெண் தரப்பில் வந்த நேபாளி பெண் என அறிய முடிகிறது.