” பயணிகளின் கனிவான கவனத்திற்கு ” எனும் குரலுக்கு சொந்தகாரர் யார் தெரியுமா ?

பரவிய செய்தி
ரயில்வே நிலையத்தில் உள்ள நடைமேடை ஒலிப்பெருக்கியில் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு ” என 20 ஆண்டுகளாக ஒலிக்கும் குரலுக்கு பின்னால் இருக்கும் பெண் சரளா சவுத்ரி. அதற்கு முன்பாக நேரடியாகவே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். தற்பொழுது அவரின் குரல் பதிவு செய்யப்பட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறை அந்த குரலை கேட்கும் பொழுது இவரை நினைவுகூருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரங்களில் நடைமேடையில் இருக்கும் ஒலிப்பெருக்கியில் ரயில்களின் வருகை, புறப்படும் நேரம் குறித்து வெளியாகும் அறிவிப்புகளை அனைவரும் கேட்டு இருக்க தவறியிருக்க மாட்டோம். அதில் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு ” என ஒலிக்கும் பெண்ணின் குரல் அனைவரையும் கவரும் விதத்திலும் அமைந்து இருக்கும்.
அந்த குரலுக்கு சொந்தமானவர் யார் என நாம் அனைவரும் யோசித்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கம்ப்யூட்டர் ரெகார்ட் வாய்ஸ் என நினைத்து இருப்போம். இன்று நாம் கேட்கும் குரல் ரெகார்ட் செய்யப்பட்ட குரலாக இருந்தாலும், அந்த அறிவிப்பிற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் 50 வயதை கடந்த சரளா சவுத்ரி.
1982-ம் ஆண்டில் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தின ஊதிய அடிப்படையில் சரளா சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போழுது அவரின் பணியானது நிரந்தரமில்லை. 1986-ம் ஆண்டில் அவரின் பணி நிரந்தரம் செய்யப்பட்டது. முதலில் மராத்தி மொழியில் ரயில் நிலையங்களில் அறிவிப்புகளை வெளியிட்டு வந்துள்ளார். அன்றைய நாட்களில் கணினி முறை அறிவிப்புகள் ஏதுமில்லை, நேரடியாகவே ரயில்கள் குறித்த அறிவிப்புகளை கூற வேண்டும்.
அனைவரையும் கவரும் குரலாக இருந்தாலும், அந்த குரலுக்கு அங்கீகாரம் கிடைக்க ஒருவர் நிச்சயம் உதவி இருக்க வேண்டும். GM Ashutosh Banerjee என்ற ரயில்வே பொது மேலாளர் தானே ரயில்வே பகுதியில் இன்ஸ்பெக்சனுக்கு சென்ற நேரத்தில் சரளா சவுத்ரி உடைய குரலை கேட்டு உள்ளார். அதன் பின்னரே அவரின் குரல் பதிவு செய்யப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட குரலை கம்ப்யூட்டர் உடன் இணைத்து பயன்படுத்த துவங்கி உள்ளனர். தற்பொழுது அனைத்து ரயில் அறிவிப்புகளும் ரயில் மேலாண்மை அமைப்பு(TMS) மூலம் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து அறிவிக்கப்படுகிறது. சரளா சவுத்ரி உடைய குரல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது ரயில்வே அறிவிப்புகள் அணைத்து ரயில் மேலாண்மை அமைப்பின் மூலம் வெளியாகி வந்தாலும், முதன் முதலில் வெளியான மென்மையான குரல் சரளா சவுத்ரி உடையதே.
சரளா சவுத்ரி உடைய குரல் அன்றைய தினத்தில் பணியாளர்கள் மத்தியில் பிரபலம் எனக் கூறலாம். அவரின் அறிவிப்புகள் குறித்து செய்தித்தாள்களிலும் வெளியாகி இருப்பதை அவர் அளித்த பேட்டி இடம்பெற்ற வீடியோவில் காண முடிந்தது.
ரயில்வே துறையில் நிலைத்து இருக்கும் குரலுக்கு சொந்தக்காரர் அத்தகைய பணியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்து விட்டு கல்யாண் பகுதியில் ஓஹெச்இ துறையில் பணியாற்றி வருகிறார். துறையை விட்டு நீங்கி இருந்தாலும் அவரின் குரல் இன்று ரயில்வே துறைக்கு பணியாற்றி வருகிறது.