சேலம் மற்றும் ஈரோட்டிற்கு 5 மணி நேரத்தில் இரயில் சுரங்கப்பாதை அமைத்து இந்திய இரயில்வே சாதனை படைத்ததா?

பரவிய செய்தி
5 மணி நேரத்தில் சேலம் மற்றும் ஈரோடு இரயில் பாதையில் சுரங்க வழிப்பாதை அமைத்து சாதனை படைத்த இந்திய இரயில்வே!
மதிப்பீடு
சுருக்கம்
5 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது உண்மை. அனால் அது சேலம் மற்றும் ஈரோடு இரயில் பாதையில் இல்லை , ஆந்திர மாநில கோதாவலாசா மற்றும் பென்ட்ருத்தி இரயில் நிலையங்களுக்கிடையே அமைக்கப்பட்டது.
விளக்கம்
சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நாலரை மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து இந்தியா ரயில்வே நிர்வாகம் சாதனை படைத்திருந்தது. அந்த பணி நடைபெறும் time-lapse video சமீபத்தில் ஊடகங்களில் ஒளிபரப்பாகியது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனது. ஆந்திர இரயில் நிலையங்களுக்கிடையே அமைக்கப்பட்டதை சேலம் மற்றும் ஈரோட்டில் அமைக்கப்பட்ட பாதை என தவறான செய்தியுடன் பகிரப்படுகிறது.
ஏற்கனவே கோதாவலாசா மற்றும் பென்ட்ருத்தியில் உள்ள ஆட்கள் இயக்கும் ரயில் கடவுப் பாதை எண் 484-ஐ நீக்கி மாற்றாக Limited Height Subway (LHS) திட்டம் அமைப்பதற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
1.5 மீட்டர் அகலம் மற்றும் 4.65மீ X 3.65மீ அளவுடைய உலோக பெட்டிகள் மற்றும் ஸ்லாப்புகள் கொண்டு கட்டுமான பணி நடைபெற்றது. 16 கனரக எஸ்கேவேட்டர்கள் , 3 கனரக க்ரேன்கள் , 5 டிப்பெர்கள் , 1000 மணல் மூட்டைகள் , 4 ஹைட்ரா மெஷின்கள், 300 கனரக ஜாக் மற்றும் 300 பணியாளர்களை கொண்டு இந்த பனி முடிக்கப்பட்டது . கட்டுமானப்பணிக்காக ராம்மூர்த்திபந்துலாபேட்டை வழியே ரயில் பாதை வெறும் 3.5 மணி நேரம் மட்டுமே தடை செய்யப்பட்டிருந்தது.
“தடைசெய்யப்பட்டப் பிறகு ரயில் தண்டவாளம் க்ரான்கள் உதவியுடன் நீக்கப்பட்டு பூமிக்கடியில் இருபுறமும் ஒரே சமயத்தில் பணி நடந்து அடித்தளம் மற்றும் பெட்டிகள் நகர்த்தப்பட்டது. உலோக பெட்டிகள் மற்றும் ஸ்லாப்புகள் கனரக க்ரேன்கள் மூலம் வைக்கப்பட்டது.” என ரயில்வே நிர்வாகம் செயலாற்றிய விதத்தினை எடுத்துரைத்தனர்.
“20 பெட்டிகளை வைக்க ஒரு மணி நேரம், மேற்பரப்பு மற்றும் தடங்களை இணைத்தப்பிறகு அடித்தள ஸ்லாப்புகள் வைக்க 1.5 மணி நேரம் ஆனது. முழுவதும் செய்து முடிக்க 4.5 மணி நேரம் ஆனது” என்றது கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் .
சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்ட 45 நாட்களுக்கு பிறகு ஆட்கள் இயக்கும் ரயில் கடவுப் பாதை மூடப்பட்டு சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டன.
இதற்கு முன்னரும் கிழக்கு கடற்கரை நிர்வாகம் இது போல் குறைந்த நேரத்தில் சுரங்கப்பாதைகள் அமைத்திருக்கின்றன. விசாகபட்டின ரயில்வே பிரிவு 2017-2018 நிதியாண்டில் 17 இரயில் சுரங்கப்பாதைகளை (LHS) அமைத்திருக்கின்றன.
இந்திய ரயில்வே கிழக்கு கடற்கரை நிர்வாகத்தின் இந்த துரித வேலைப்பாடுகளை பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் சேலத்தில் அமைக்கப்பட்ட சாதனை என தவறாக பதிவிடுவது சேலம் எட்டு வழிச்சாலையை ஆதரிப்பதோடு தொடர்புடையதா என்பது கேள்விக்குறி.