அகர்வால், வைஷு சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க| சர்ச்சையான ரயில்வே கேட்டரிங் விளம்பரம் !

பரவிய செய்தி
அகர்வால் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமாம்.
மதிப்பீடு
விளக்கம்
யார் தமிழன் ? என்ற முகநூல் பக்கத்தில் ” ரயில்வே கேட்டரிங் விளம்பரத்தின் புகைப்படத்துடன் ” அகர்வால் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமாம். ரயில்வேயை தனியார் மயமாக்கிவிட்டு, அந்த தனியார் ரயில்வேயில் குறிப்பிட்ட பனியா மற்றும் பிராமண சமூகத்தை மட்டும் தேர்வு செய்கின்றனர் ” என்ற குற்றச்சாட்டை பதிவு செய்யப்பட்டது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட விளம்பரம் குறித்து தேடிய பொழுது இந்திய ரயில்வேத் துறையில் தனியார் கேட்டரிங் ஒப்பந்ததாரர் வெளியிட்ட ஆட்கள் தேவை விளம்பரத்தில் அகர்வால் மற்றும் வைஷு ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மையே.
டெல்லியின் ஒக்ஹ்லா பகுதியை தலைமையிடமாகக் கொண்ட ஆர்.கே மீல்ஸ் என்ற தனியார் கேட்டரிங் ஒப்பந்ததாரர்களின் கீழ் குறைந்தது 100 ரயில்களில் கேட்டரிங் பணி செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 6-ம் தேதி அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் , துறைசார்ந்த மேலாளர் உள்பட 100 ஆண்கள் தேவைப்படுவதாகவும் , அதிலும் குறிப்பாக , அகர்வால் மற்றும் வைஷு சமூகத்தைச் சேர்ந்த மற்றும் நல்ல குடும்ப பின்னணி கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப்படி குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே பணியமர்த்தும் செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன . இதையடுத்து , சம்பந்தபட்ட மனிதவள மேலாளரை (HR) ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் ரயில்வே தரப்பில் வெளியான அறிக்கையில், ” ஐ.ஆர்.சி.டி.சி ஆல் தீவிரமான பார்வை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் சாதி வழிகளில் விளம்பரம் கொடுப்பதை தவிர்க்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. எந்தவொரு சாதி/மதம் அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்த பொருத்தமான நபர்களை நியமிக்க வேண்டும். இது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ஒப்பந்ததாரர்களால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது . விளம்பரத்திற்கு பொறுப்பான மனிதவள மேலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் ” எனக் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது .
சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு , இடமளிப்பது , வீடு வாடகைக்கு அளிப்பது உள்ளிட்டவை இந்திய அளவில் இன்றும் நிகழ்ந்து வருகிறது.
எனினும், ரயில்வே துறையில் பணியாற்றும் கேட்டரிங் ஒப்பந்த நிறுவனத்தில் வெளிப்படையாக விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனங்களை பெற்று உள்ளது .