கனமழை பெய்து வெள்ளம் வரப் போவதாகப் பரவும் செயற்கைகோள் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி

நாம பாத்திட்டு இருக்கிறது இந்தியாவோட சேட்டிலைட் இமேஜ். இதுவந்து, இந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அடுத்த சனி, ஞாயிறு வரைக்கும் தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்யப் போகிறது என்பதை இந்த இமேஜ் கிளியரா காண்பிக்கிறது. சென்னையில் மிகப் பெரிய அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இது நடந்தால் 2015-ல் சென்னையில் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்ததோ அதற்கு சமமாக வெள்ளம் வர வாய்ப்பு இருக்கிறது. அதுபோக, தமிழ்நாடு முழுவதும் எக்கச்சக்க மழை பெய்யப் போகிறது. ஆனா, இந்த இமேஜ் படி பார்த்தால், அந்த புயல் ரவுண்டர் அடித்து மதுரையை தொட்டுட்டு போகுது. மிகப் பெரிய அளவில் மதுரையிலும் ஒரு வெள்ளம் வர வாய்ப்பு இருக்கிறது. வர வாரங்களில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மதிப்பீடு

விளக்கம்

கனமழை பெய்தாலே வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த காலங்களில் நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் இம்முறை நிகழ்ந்து விடுமோ என மக்கள் அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கனமழை பெய்து சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படப் போவதாக செயற்கைகோள் காட்சியை காண்பித்து ஒருவர் பேசும் வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த ஒருவாரத்திற்கு தென்தமிழகத்தில் கனமழை பெய்யப் போவதாக செயற்கைகோள் காட்சிகளுடன் எச்சரிக்கைக்கும் வீடியோ குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களிடம் யூடர்ன் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இதுமுற்றிலும் பொய்யான செய்தி. இந்த வீடியோ 7, 8 நாட்களுக்கு முன்பாக புயல் தென்தமிழகத்திற்கு செல்வது போன்று முதலில் காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோவை டவுன்லோடு செய்து பரப்பி வருகிறார்கள். தென்தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பே கிடையாது. மதுரை, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பில்லை.

முதலில் அந்த பகுதியின் வழியாக புயல் செல்வதாக இருந்தது. அதற்காக அவசரப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது 2 நாட்களில் உறுதியாக சொல்ல முடியும், வடதமிழகத்தின் காரைக்கால் முதல் சென்னை வரை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

வெள்ளம் குறித்து இப்போது ஏதும் கூற இயலாது. மழை எப்படி பெய்கிறது என்று பார்ப்போம். சென்னையில் அதிக மழை பொழிந்து அதற்கு ஏற்றப்படி 22 அடியை எட்டிய பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் மிக கனமழை பொழியும்.

சென்னையின் அருகே புயல் கரையை கடக்கும்படி இருந்தால் மழையின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும். 2015-ல் அப்படி நடந்ததால் வெள்ளம் குறித்து எண்ணுவது நியாயமானது. ஆனால், முதலில் மழை எப்படி பெய்கிறது என்பது பொறுத்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். வைரலாகும் வீடியோ பழைய கம்ப்யூட்டர் மாடலின் கிராஃபிக்ஸ் ” என விளக்கம் அளித்து இருந்தார்.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, தென்தமிழகத்தில் கனமழை பொழிந்து வெள்ளம் வரப் போவதாக வைரலாகும் செயற்கைகோள் வீடியோ பழைய கம்ப்யூட்டர் மாடலின் கிராஃபிக்ஸ் என அறிய முடிகிறது. தவறான செய்திகளை பகிர்ந்து மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button