ரவி வர்மாவின் ஓவியம் எனத் தவறாகப் பரப்பப்படும் நடிகையின் புகைப்படம் !

பரவிய செய்தி

என்ன இருந்தாலும் நம்ம ராஜா ரவிவர்மா ராஜா தான்!

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்பான மோனாலிசா ஓவியத்தை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள், ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள் என இரண்டு ஓவியங்களை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

Archive link

Twitter Link | Archive Link

அப்பதிவுகளில் இந்தியாவிலேயே மதிக்கப்பட வேண்டிய கலைஞரின் படைப்புகளைக் கடந்த கால அரசும், தற்போதைய அரசும் வெளிக்கொணர முயற்சி எடுக்கவில்லை எனக் கூறி வருகின்றனர். 

உண்மை என்ன ?

பரவக் கூடிய படத்தைப் பற்றித் தேடியதில், 2021 ஜூலை மாதம் டிவிட்டரில் பதிவிட்டிருந்த பதிவொன்று கிடைத்தது. வைரலாகக்கூடிய அதே தலைப்புடன் அப்பதிவு உள்ளது. ஆனால், ரவி வர்மாவின் ஓவியம் என்று சொல்லக்கூடிய படத்திற்குப் பதிலாக அதே மாதிரியான வேறு ஒரு ஓவியம் அதில் இடம்பெற்றுள்ளது. 

Twitter link

மேலும் அப்பதிவில், ‘இரண்டு உருவப்படங்கள் உள்ளது. ஒன்று ராஜா ரவி வர்மா வரைந்தது. அதனை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மற்றொன்று லியோனார்டோ டாவின்சி வரைந்தது. அதனை மில்லியன் முறை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவி வர்மாவின் ஓவியம் என மேலே உள்ள ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம். ‘Radha in the Moonlight – Raja Ravi Varma 1890’ என்ற தலைப்பில் Google Arts & Culture தளத்தில் அப்படத்தின் முழு உருவ ஓவியம் பதிவிடப்பட்டுள்ளது. 

அதன் நிலைத்தகவலில், ‘ராஜா ரவி வர்மா வரைந்த ராதாவின் ஓவியம். ராதாவின் மென்மையான அழகு, புத்திசாலித்தனம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மேலும் ராதா இணையற்ற அழகு கொண்டவர் என்பதால், ராஜா ரவி வர்மா கூடுதல் கவனிப்பு மற்றும் நேர்த்தியுடன் அவரை வரைந்துள்ளார். கிருஷ்ணரின் தெய்வீக குணங்களை அறிந்த ராதா, பூஜைக்குப் பூக்கள் மற்றும் இனிப்பு வகைகளைத் தன் அருகில் வைத்திருக்கிறார். பளபளக்கும் தண்ணீருக்கு அருகில் உள்ள பாறைகளில் அவள் நிம்மதியாக அமர்ந்திருக்கிறாள்’ என்றுள்ளது.

ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியம் எனப் பரவும் படத்தில் ‘Sruvam Studios’ என்ற வாட்டர் மார்க் உள்ளது. அதனைத் தொடர்ந்து அப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், நடிகை ஸ்வாதி தனது பேஸ்புக் பக்கத்தில் 2019ம் ஆண்டு அப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இவர் தமிழில் சுப்ரமணியபுரம், யாக்கை, வடகறி போன்ற திரைப்படங்கில் நடித்தவர்.

அதில், ‘Radha in the Moonlight | Raja Ravi Varma Recreation series’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது ரவி வர்மாவின் ஓவியத்தைப் போல மறு உருவாக்கம் செய்து (Recreation) உள்ளனர். அதனை ரவி வர்மாவின் ஓவியம் எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், நடிகை ஸ்வாதியை வைத்து ரவி வர்மாவின் ஓவியம் போல மறு உருவாக்கம் செய்து செய்த புகைப்படத்தினை, ரவி வர்மாவின் ஓவியம் எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader