விதவையாக இருந்த ராஜாஜியின் மகளுக்குக் காந்தியிடம் பேசி அவரது மகனைத் திருமணம் செய்து வைத்தவர் பெரியார் எனப் பரவும் பொய் !

பரவிய செய்தி
மூதறிஞர் ராஜாஜியின் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். 12 வயதில் கணவர் இறந்து விடுகிறார். மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கிறது ராஜாஜி குடும்பம். எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு செல்கிறார். இந்த மகளை பார்க்கிறார். ராஜாஜியை திட்டி அந்த பெண்ணை இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். அதன் பின் காந்தியிடம் பெரியார் இந்த தகவலை சொல்லி, மறு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.
மதிப்பீடு
விளக்கம்
ராஜாஜியும் தந்தை பெரியாரும் அரசியல் ரீதியாக நேர் எதிர் கருத்துக்களைக் கொண்டிருப்பினும், தனி நபர்களாக நல்ல நட்பு பாராட்டி வந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே.
மூதறிஞர் ராஜாஜியின் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். 12 வயதில் கணவர் இறந்து விடுகிறார். மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கிறது ராஜாஜி குடும்பம்.
எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு செல்கிறார். இந்த மகளை பார்க்கிறார். ராஜாஜியை திட்டி அந்த பெண்ணை இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். pic.twitter.com/FrhkLUj2iO
— Deva (@Deva_twitt) September 19, 2023
இந்நிலையில் ராஜாஜியின் மகளின் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியில், ‘ராஜாஜியின் மகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அச்சிறுமிக்கு 12 வயது இருக்கும் போது அக்கணவர் இறந்து விட்டதால் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கப்பட்டார். பெரியார் ஒருமுறை ராஜாஜி வீட்டுக்குச் சென்ற போது அச்சிறுமியைப் பார்த்து ராஜாஜியிடம் பேசி அப்பெண்ணை இயல்பு நிலைக்கு மாற்றினார்.
மூதறிஞர் ராஜாஜியின் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். 12 வயதில் கணவர் இறந்து விடுகிறார். மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கிறது ராஜாஜி குடும்பம்.
எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு செல்கிறார். இந்த மகளை பார்க்கிறார். ராஜாஜியை திட்டி அந்த பெண்ணை இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். pic.twitter.com/LDs7PC3d3Y
— Jothi Meena (@jothimeena76) September 18, 2023
பின்னர் பெரியார் காந்தியிடம் இந்த தகவலைச் சொல்லி மறுமணத்துக்கு ஏற்பாடு செய்தார். காந்தியும் ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தனது மகன் தேவதாஸ் காந்திக்கு ராஜாஜியின் மகளைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார். அப்போது அச்சிறுமிக்கு 15 வயது என்பதால் 5 ஆண்டுகள் காத்திருந்து அதன் பின் பெரியார் திருமணம் செய்து வைக்கிறார்’ என்றுள்ளது.
இதனை முதலில் சுமதி என்ற பேராசிரியர் ஒருவர் பதிவிட்டு, பின்னர் நீக்கிவிட்டார். ஆனால், அவர் பதிவிட்டதை பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
ராஜாஜியின் மகள் லட்சுமியின் திருமணம் குறித்துப் பரவக் கூடிய தகவல் குறித்துத் தேடியதில், அவருக்குச் சிறு வயதில் திருமணமாகி அக்கணவர் இறந்ததாக எந்த ஒரு வரலாற்று ஆவணமும் கிடைக்கவில்லை.
ராஜ்மோகன் காந்தி என்ற வரலாற்று ஆசிரியர் ராஜாஜி பற்றி ‘Rajaji A Life’ என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ராஜாஜியின் மகள் திருமணம் குறித்தான பகுதிகளும் இடம்பெற்றுள்ளது.
தேவதாசும் லட்சுமியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்பது ராஜாஜியையும் காந்தியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மதராசில் தேவதாஸ் காந்தி இந்தி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த நேரத்தில் ராஜாஜிக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
ஆனால், இருவரும் விரும்புவதாகக் கூறுகையில் என்ன செய்வது என இராஜாஜிக்கு தெரியவில்லை. மேலும் தேவதாஸ் பிராமணர் அல்ல. அது மட்டுமின்றி 1927ல் லட்சுமிக்கு பதினைந்து வயதுதான் நிரம்பி இருந்தது. இராஜாஜிக்கும் காந்திக்கும் ஜாதி ஒரு பிரச்சனையாக இல்லை. லட்சுமியின் வயதையே அவர்கள் கருத்தில் கொண்டனர்.
இவர்களின் காதலைச் சோதிக்கும் விதமாக இருவரையும் காத்திருக்கக் கோரினர். அக்கால கட்டத்தில் சந்திக்கவோ, கடிதம் எழுதவோ கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து இருவரும் பெற்றோரின் அனுமதிக்காக நான்கு வருடங்களும், திருமணத்திற்காக இரண்டு வருடங்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.
இறுதியாகக் காந்தியும் கஸ்தூரிபாவும் சிறைக்கு வெளியே இருக்கும்போது, லட்சுமி மற்றும் தேவதாஸ் திருமணம் நடைபெற வேண்டுமென இராஜாஜி விரும்பினார். எனவே இது குறித்து கஸ்தூரிபாய்க்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 1933, ஜூன் 16ம் தேதி பூனாவில் உள்ள பிரேம்லீலா தாக்கர்சியின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது என்றும், தேவதாஸின் சகோதரர் கூட அழைக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1927ல் லட்சுமியின் வயது 15 எனக் கூறப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் 1933ல் திருமணம் நடந்த போது 21 வயதாக இருந்திருக்கும்.
மேலும் 2017ல் விகடன் இணையதளத்தில் ‘மகன் திருமணத்துக்கு ‘தமிழ்நாட்டின் சம்பந்தி’ காந்தி விதித்த நிபந்தனை!’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் மேற்கண்ட தகவல்களே இடம்பெற்றுள்ளது.
தேவதாஸ் காந்தி மற்றும் லட்சுமிக்கு திருமணம் நடந்த புகைப்படம் ‘old indian photos’ என்னும் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அதிலும் 1933ம் ஆண்டு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தகத்திலும் விகடன் கட்டுரையிலும் லட்சுமி – தேவதாஸ் திருமணம் குறித்த பகுதிகளில் பெரியார் பற்றிய எந்த குறிப்புகள் இடம்பெறவில்லை. மேலும், லட்சுமிக்கு முதல் திருமணம் நடைபெற்று அவர் இறந்ததாகவும் எந்த பதிவும் இல்லை. இதிலிருந்து பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், இராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் காந்தியின் மகன் தேவதாசுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
லட்சுமிக்குச் சிறு வயதில் செய்து வைக்கப்பட்ட முதல் திருமணத்தின் கணவர் இறந்ததாகவும், அது குறித்து பெரியார் காந்தியிடம் பேசி பின்னர் தேவதாசுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.