Fact Check

ராஜராஜசோழன் இந்தோனேசியாவில் கட்டிய நுழைவாயிலா ?

பரவிய செய்தி

1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் இராஜராஜசோழன் இந்தோனேசியாவில் கட்டிய நுழைவாய்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

சோழப் பேரரசர் ராஜராஜசோழனின் ஆட்சி, சாதனை, போர் என பேசும் போதும், படிக்கும் போதும் தமிழ் மக்களிடையே உண்டாகும் ஆர்வம் அளப்பறியது. இதற்கிடையில், தமிழ் மன்னர்கள் குறித்து யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் காணப்படும் ஏராளமான பதிவுகள் ஆச்சரியம் கொள்ள வைக்கச் செய்வதோடு அதிகம் வைரலாகவும் செய்கிறது. எனினும், அப்படி பகிரப்படுபவையில் சிலவற்றின் உண்மைத்தன்மை என்னவென்றே அறியாமல் பகிர்வதும் உண்டு.

Advertisement

தஞ்சை மன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் இந்தோனேசியாவில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான நுழைவாயில் என மேற்காணும் புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் தமிழ் சமூகத்தால் அதிகம் பகிரப்பட்டு வருகிது. இதன் உண்மைத்தன்மை குறித்தும் ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

ராஜராஜசோழனின் மகனான முதலாம் ராஜேந்திரச் சோழன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இணை அரசனாக இருந்து பல போர்களில் ஈடுபட்டார். ராஜராஜசோழன் காலத்தில் ஈழத்தை வென்றதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. ராஜேந்திர சோழனே கடல் கடந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு படையெடுத்து சென்றார். ராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீவிஜயம்(தற்போதைய இந்தோனேசியா), கடாரம் (மலேசியாவின் ஒரு பகுதி)  என பல பகுதிகளை தன் படைகளின் மூலம் வெற்றிக் கொண்டார். ராஜேந்திர சோழன் காலத்தில் தான் சோழப் படைகள் அதிக அளவில் கடல் கடந்து போர்களை சந்தித்து இருக்கின்றன.

Twitter link | archive link

2017-ம் ஆண்டிலேயே இந்தோனேசியாவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட நுழைவாயில் என மேற்காணும் புகைப்படம் தமிழ் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அப்படி வைரலான பதிவுகளின் ட்வீட் பதிவில், தொல்லியல் ஆய்வாளர் தஞ்சை ஆ.மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவல்கள் இணையத்தில் அதிகம் பகிர்கின்றன எனப் பதிவிட்டு இருந்தார்.

Twitter archive link 

1000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தோனேசியாவில் கட்டப்பட்ட நுழைவாயில் என பரப்பப்படுவது இந்தோனேசியாவின் ஜாவா அருகே மேற்கு பாலி பகுதியில் அமைந்துள்ள Triumphal Arch of the Gods அல்லது Arco de Gilimanuk என அழைக்கப்படும் நுழைவாயிலாகும். Gilimanuk துறைமுகப் பகுதியில் அமைந்து உள்ளது.

மேற்காணும் நுழைவாயில் யாருடைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விரிவானத் தரவுகள் கிடைக்கவில்லை. இந்தோனேசியாவில் பழமையான கட்டிடக்கலைகள் பல காணப்படுகின்றன. அதுவும் பாலி பகுதியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே பல பகுதிகளை சோழப் பேரரசு கீழ் ஆட்சி செய்தனர். எனினும், கடந்த 1000 ஆண்டுகளில் பல வரலாற்று அடையாளங்கள் அழிந்து போயின. கடல் கடந்து இந்தோனேசியா நாட்டில் இந்து மத அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளதற்கு கூட தொல்லியல் ஆய்வுகள், வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. 1000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில்கள் இந்தோனேசியாவின் அகழ்வாராச்சியில் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றிற்கும், வைரலாகும் நுழைவாயிலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. வரலாற்று சார்ந்த ஆதாரங்கள் ஏதும் தொடர்புடையவையாக இல்லை. ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டது என பரப்புவதை தொல்லியல் ஆய்வாளர்களும் மறுக்கின்றனர்.

மேலும் படிக்க : ராஜராஜச் சோழன் கட்டிய கிணறு வடிவ அரண்மனையா ?| ஃபேஸ்புக் உளறல்.

இதற்கு முன்பாகவும், குஜராத்தில் அமைந்துள்ள பழமையான கிணறுவடிவ அமைப்பை ராஜராஜசோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு அரண்மனை என வதந்தியை பரப்பி இருந்தனர். தமிழ் மன்னர்களின் வீரத்தையும், ஆட்சியையும் பெருமை கொள்ள பகிர்வதில் தவறு இல்லை, ஆனால் மிகைப்படுத்தியும், தவறான தகவலை இணைத்தும் பரப்புவது ஏற்புடையது அல்ல.

முடிவு : 

நம் தேடலில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் இராஜராஜசோழன் இந்தோனேசியாவில் கட்டிய நுழைவாய் என பரப்பப்படும் தகவல் தவறானது என அறிந்து கொள்ள முடிந்தது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button