ராஜராஜச் சோழன் கட்டிய கிணறு வடிவ அரண்மனையா ?| ஃபேஸ்புக் உளறல்.

பரவிய செய்தி
ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை. எத்தனை பேருக்கு தெரியும்? தமிழன் திறமைக்கு இதுவே சான்று.
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை. குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது. இதனுள் 9 கிமீ நீள சுரங்கப்பாதை. நினைக்க நினைக்க ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. எந்த இஞ்ஐினிரிங் காலேஜ்ல படிச்சி கட்டினாங்க. தமிழனின் சிறப்பை உலகறியச்செய்வோம்.
மதிப்பீடு
விளக்கம்
சோழப் பேரரசர் ராஜராஜச் சோழன் தன் மனைவிக்காக குஜராத்தின் பதான் பகுதியில் கட்டிய கிணறு வடிவ பிரம்மாண்ட அரண்மனை எனும் தவறான தகவலுடன் இப்புகைப்படமானது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தவறான ஃபார்வர்டு தகவல் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே முகநூலில் பகிரப்பட்டு உள்ளது. பல வருடங்களாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதால் இதுகுறித்து பதிவிட எண்ணினோம்.
உண்மை என்ன ?
சோழப் பேரரசர் ராஜராஜச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் கட்டிய பெருவுடையார் கோவில் 1000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. பேரரசர் ராஜராஜச் சோழனின் கட்டுப்பாட்டில் மேற்கு பகுதியில் இன்றைய கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்டவையின் எல்லைப் பகுதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஆட்சிக்காலத்தில் மேற்கு நோக்கி முன்னேறாமல் கிழக்கி நோக்கியும், கடல் கடந்து பல நாடுகளை தங்கள் வசம் கொண்டு வந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. குஜராத் பகுதி வரை படையெடுப்பு செய்ததாக வரலாற்று தகவல்களே இல்லை.
ராஜராஜச் சோழன் பெயரைக் குறிப்பிட்டு பரவும் புகைப்படத்தில் இருக்கும் கிணறு வடிவ அமைப்பு உண்மையில் குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராணி கி வாவ் (ராணியின் கிணறு) என அழைக்கப்படும் கிணறு வடிவ அமைப்பை 1063-ம் ஆண்டில் ராணி உதயமதி என்பவர் தன் கணவர் பீம்தேவ் நினைவாக கட்டியுள்ளார். பதான் மாவட்டத்தின் சரஸ்வதி நதிக்கரையில் அமைக்கப்பட்டு இருக்கும் இக்கிணறு வெள்ளத்தில் மூழ்கியதாகவும், 1980-ல் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி குழுவால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட போது அழகிய வேலைப்பாடுகள் உடன் காணப்பட்டதாக குஜராத் சுற்றுலா இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பு ” ராணி கி வாவ் ” அமைப்பை உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. ராஜராஜசோழன் காலத்திற்கு பிறகே ராணியின் கிணறு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட 100 ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் ராணி கி வாவ் அமைப்பு அச்சிடப்பட்டு இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
11 நூற்றாண்டில் ராணி உதயமதி தன் கணவரின் நினைவாக கட்டியப் படிக்கிணறை ராஜராஜச் சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவ அரண்மனை என தவறாக பரப்பி வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக பகிர்ந்து வரும் இந்த புகைப்படத்துடன் கூடிய பதிவுகளில் கமெண்ட் செய்யும் பலரும் வரலாறு அறியாமல் பேசாதீர்கள், தவறான தகவல் என பதிவிட்டு வருகிறார்கள். எனினும், அந்த பதிவு மீண்டும் மீண்டும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், ராஜராஜச் சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை என பரப்பப்படும் புகைப்படம் குஜராத்தில் ராணி உதயமதி தன் கணவரின் நினைவாக கட்டிய படிக்கிணறு என அறிய முடிகிறது.