நாட்டுப்புற நடனம் ஆடிய கலெக்டர் எனத் தவறான தகவலைப் பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி !

பரவிய செய்தி
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தும் தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் உள்ள தனது தொடர்பை அவர் தொடர்கிறார்.
மதிப்பீடு
விளக்கம்
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்ட ஆட்சியர் ‘ருக்மணி ரியார்’ பாரம்பரிய உடையில் நாட்டுப்புற நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
This is India's Civilisational assertion https://t.co/DEOTe8LaBJ
— S Gurumurthy (@sgurumurthy) May 2, 2023
மேலும் அந்த பதிவுகளில் “ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தும் தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் உள்ள தனது தொடர்பை அவர் தொடர்கிறார்” என்பது போன்றும், “இதுவே இந்திய நாகரிகத்திற்கான சான்று” என்பது போன்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
உண்மை என்ன ?
பகிரப்படும் வீடியோவின் கீபிரேம்களை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்கையில், இதன் உண்மையான வீடியோவை முகநூலில் காண முடிந்தது. இந்த வீடியோவானது हम जाट हैं என்ற முகநூல் பக்கத்தில் 2019 ஜூன் 13 அன்று பதிவிடப்பட்டுள்ளது.
பகிரப்பட்ட அந்த வீடியோவில், “ராஜஸ்தானின் ஷேகாவதி பகுதியைச் சேர்ந்த ஜட்னி, தலையில் வைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் பானையை பேலன்ஸ் செய்து மிகவும் சிறப்பாக நடனமாடினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தேடியதில், 2020 டிசம்பர் 19 அன்று Rajastani Online Media என்னும் யூடியூப் தளத்தில் இவ்வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள தலைப்பை மொழிப்பெயர்ப்பு செய்து பார்க்கையில், இது ஸ்ரீகங்காநகர் மாவட்ட ஆட்சியர் இல்லை எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது பரப்பப்படும் வீடியோவையும், இதற்கு முன்னர் 2019, 2020-களில் பகிரப்பட்ட வீடியோவையும் தொடர்புப்படுத்தி பார்த்ததில், இவை இரண்டும் ஒரே வீடியோ என்பதை அறிய முடிகிறது.
ஸ்ரீகங்காநகர் மாவட்ட ஆட்சியர் ருக்மணி ரியார் IAS தொடர்பான செய்திகளைத் தேடியதில், The Tribune என்னும் தளத்தில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்திற்கு ஆட்சியராக மாற்றப்பட்டது தொடர்பான செய்தி 2022 ஜனவரி 19 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘ராஜஸ்தானின் பஞ்சாப்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் இரண்டாவது பஞ்சாப் அதிகாரியாக ருக்மணி ரியார் ஒரு வாரத்தில் பதவியேற்கயுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டுப்புற நடனம் ஆடும் பெண்ணின் வீடியோ 2019ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வந்துள்ளது என்பதையும், ஆனால் ருக்மணி ரியார் அங்கு ஆட்சியராக பதிவியேற்றது 2022-இல் தான் என்பதையும் அறிய முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், துக்ளக் குருமூர்த்தி பகிர்ந்த வீடியோவில் நாட்டுப்புற நடனம் ஆடும் பெண் ஸ்ரீகங்காநகர் மாவட்ட ஆட்சியர் ருக்மணி ரியார் அல்ல என்பதை அறிய முடிகிறது.