This article is from Dec 15, 2018

பச்சைக் கொடியினாலே பாகிஸ்தான் தானா ? | ராஜஸ்தான் ஊர்வல வதந்திகள்.

பரவிய செய்தி

ராஜஸ்தானின் ஜோத்பூரில் காங்கிரஸ் வெற்றி ஊர்வலத்தில். “ பாகிஸ்தான் வாழ்க” மற்றும் இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் எல்லோரும் “அல்லாஹு அக்பர்” சொல்லித்தான் வாழ வேண்டும் என்று கையில் கத்தி வாள் போன்ற ஆயுதங்களுடன் முழக்கம். இந்துக்களே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு புரளிகள் பரப்பப்படுகின்றன.

  • பாகிஸ்தான் கொடி எனக் கூறுபவை முஸ்லிம் கட்சியின் கொடியாகும்.
  • ஊர்வலத்தில் அல்லாஹு அக்பர் எனக் கூறுகிறார்கள் என செய்தியில் வெளியானவை சென்ற ஆண்டு நடந்தவை.
  • ஹெச்.ராஜா பகிர்ந்த வன்முறை பதிவு சாமியார் ராம் ரஹீம் கைதின் போது நடந்தது.

விளக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த உடன் பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் இனி இந்துக்கள் இங்கு வாழவே முடியாது என்பது போன்ற வன்முறை எண்ணத்தை விதைக்க முயற்சித்து வருகின்றனர்.


மக்களிடையே மத வன்முறையை விதைக்கப் பதிவிடப்பட்ட வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையை கண்டு வேகமாக பரவி வருகிறது. அவ்வாறு பரவும் தவறான வீடியோக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக காண்போம்.

காங்கிரஸ் ஊர்வலத்தில் பாகிஸ்தான் கொடி : 

நீண்ட நாட்களாக சமூக வலைத்தளத்தில் பச்சை நிறத்தில் கொடி இருந்தாலே அது பாகிஸ்தான் கொடி என நினைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் கட்சிகள் பச்சை நிற கொடியையே வைத்துள்ளனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஊர்வலத்தில் கொண்டு சென்ற பச்சைக் கொடியில் இருபுறமும் வெள்ளை நிறம், மத்தியில் சில சின்னங்கள் இருப்பதைக் காண முடிந்தது. பாகிஸ்தான் கொடியில் அவ்வாறு இருப்பதில்லை. ஊர்வலத்தில் கொண்டு சென்ற கொடி ஒரு முஸ்லிம் கட்சியின் கொடியாக இருக்கலாம். அதே ஊர்வலத்தில் இந்திய தேசியக் கொடியும் இருந்துள்ளது.

மேலும், ஊர்வலம் பற்றி பரவும் செய்திகள் வதந்திகள் என ராஜஸ்தான் மாநில காவல்துறை ட்விட்டரில் டிசம்பர் 12-ம் தேதி பதிவிட்டு உள்ளது. வன்முறையைத் தூண்டும் வதந்தியைப் பரப்பியவரைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

செய்தி வீடியோ :

தொலைக்காட்சி செய்தியில் முஸ்லீம்கள் அல்லாஹு அக்பர் போன்று இந்தியில் கோஷமிடும் வீடியோவை வெளியிட்டு செய்தியாளர் பரபரப்பாகப் பேசும் காட்சியும் தற்போது இணையத்தில் வைரல்.

இந்த வீடியோவை வெளியிட்ட சுதர்சன் சேனலின் செய்தி வாசிப்பாளர் விரைவாக பேசும் வீடியோவை பார்க்கும் பொழுது அனைவருக்கும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வாறு நடக்கிறது என நினைக்க வைத்து இருக்கும்.

ஆனால், அது உண்மை அல்ல. சுதர்சன் சேனலில் இந்த வீடியோ வெளியானது சென்ற ஆண்டு ஆகும். 2017 டிசம்பர் 15-ம் தேதி இதன் உண்மையான வீடியோவை சேனலின் நிரூபர் மனோகர் சிங்க் youtube-ல் பதிவேற்றி உள்ளார்.

முதல்வர் தேர்வில் வன்முறை :

ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சியில் நடந்த கோஷ்டி மோதலில் இவ்வாறான வன்முறை சம்பவம் நிகழ்ந்தது என இப்படங்களை பதிவிட்டு உள்ளனர்.

ஹெச்.ராஜா பகிர்ந்த இந்த செய்தி வதந்தியே ! இப்படமானது பாலியல் வழக்கில் சிறை சென்ற சாமியார் ராம் ரஹீம்-க்காக நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது எடுக்கப்பட்டவை.

முஸ்லிம் மற்றும் ஹிந்துக்கள் இடையே வன்முறைய தூண்டும் நோக்கத்தில் முன்பு நடந்த வீடியோக்களை இணைத்து வதந்திகளை பரப்புகின்றனர் என்பதை இதில் இருந்து அறிய முடிகிறது.

சமூக வலைத்தளத்தில் வதந்திகளைப் பரப்பி அரசியல் மற்றும் மத வெறுப்புணர்வை உருவாக்க ஒரு கூட்டமே செயல்படுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader