ராஜஸ்தானில் பாலை விட கோமியத்திற்கு அதிக விலையா ? | காரணம் என்ன ?

பரவிய செய்தி
ராஜஸ்தானில் படு கிராக்கி, கோமியம் லிட்டர் 30 ரூபாய், பால் 25 ரூபாய். வேளாண் பல்கலைக்கழத்திற்கு 500 லிட்டர் சப்ளை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ் செய்தித்தாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோமியமானது பாலை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை முகநூலில் பதிவிட்டு கிண்டல் செய்து இருந்த பதிவு ஒன்றை காண முடிந்தது.
உண்மையில், ராஜஸ்தானில் 25 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு லிட்டர் பாலின் விலையை விட மாட்டின் கோமியம் அதிக விலையில் விற்பனை ஆகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். ராஜஸ்தான் மாநில கோமியம் விற்பனை தொடர்பான தேடலில், 2018 ஜூலை மாதத்தில் பிஸ்னஸ் டுடே, டைம்ஸ்ஆஃப்இந்தியா உள்ளிட்டவையில் வெளியானச் செய்திகளை காண முடிந்தது.
ராஜஸ்தானில் Gir மற்றும் Tharparkar உள்ளிட்ட உயர் ரக பசு மாடுகளின் கோமியமானது மொத்த விற்பனை சந்தையில் லிட்டருக்கு 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகியது. அன்றைய தினத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ22 முதல் 25 வரை ஆக இருந்தது.
பசு மாடுகளை வளர்பவர்கள் பாலின் மூலம் ஈட்டும் வருவாயை விட அதிக வருமானத்தை பசுவின் கோமியத்தில் இருந்து ஈட்டத் துவங்கினர். ஜெய்ப்பூரை சேர்ந்த கைலேஷ் குஜ்ஜர் என்பவர் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு கோமியத்தை விற்பனை செய்து வந்தார். கோமியத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் கோமியத்தை விற்பனை செய்ய தொடங்கிய நேரத்தில் ஈட்டிய வருவாயை விட 30 மடங்கு வருமானம் கிடைப்பதாக டைம்ஸ்ஆஃப்இந்தியாவிற்கு தெரிவித்து இருக்கிறார்.
இயற்கை விவசாயம் செய்பவர்கள் பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக மாட்டின் கோமியத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மருத்துவ பயன்பாடுகளுக்கு மற்றும் ஆன்மீக சடங்குகளுக்கும் மக்கள் கோமியத்தை அதிகம் பயன்படுத்தியதால் அவற்றின் தேவை அதிகரித்தது.
கோமியத்தின் விலை அதிகரிப்பால் மாடுகள் வெளியேற்றும் கோமியம் தரையில் வீணாகாமல் சேமிக்கத் தொடங்கினர். இதற்காக இரவு நேரங்களில் மாடுகளை தவறாமல் கண்காணித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
பால் வர்த்தகரான ஓம் பிரகாஷ் மீனா கூறுகையில், ” ஜெய்ப்பூரில் கிர் இன மாடுகளின் கோமியத்தை வாங்கி ரூ.30 முதல் ரூ 50 வரையில் விற்பனை செய்து வருகிறேன். பயிர்களை பூச்சிகளின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்கள் மாட்டின் கோமியத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, மங்கள நிகழ்ச்சிகளிலும் கோமியத்தை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்துகின்றனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.
ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் அரசால் இயங்கும் மஹாரானா பிரதாப் பல்கலைக்கழகத்தில் இயற்கை விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு மாதந்தோறும் 300 முதல் 500 லிட்டர் வரையிலான கோமியம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையில் செலவிடுகின்றனர்.
முடிவு :
கடந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலின் விலையை விட கோமியத்தின் விலை அதிகமாக இருந்தது உண்மையே. இயற்கை விவசாயம், மருத்துவ பயன்பாடுகள், ஆன்மீக சடங்குகள் ஆகியவற்றிற்கு மக்கள் அதிக அளவில் கோமியத்தை பயன்படுத்த தொடங்கியதால் கோமியத்தின் விலை பாலை விட உயர்ந்தது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.