ராஜஸ்தான் துணை முதல்வர் மோடி படத்தின் மீது கருப்பு சாயத்தை பூசினாரா ?

பரவிய செய்தி
இவர் ராஜஸ்தான் துணை முதன்மந்திரி சச்சின் பைலட். பிரதமரின் போஸ்டரைத் தன் கைகளால் என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள்.
இவர்கள் நாட்டிற்கு என்ன நன்மை செய்யப் போகிறார்கள்? அடிமட்டத் தொண்டன் செய்வதைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் இவர்களே நாச வேலையில் இறங்கும் பொழுது நல்லது நடக்க வாயப்பே இல்லை!
முடிந்த வரை இதைப் எல்லோருக்கும் பகிருங்கள். உங்கள் வாக்குகளை முன்னேற்றத்திற்கு அளியுங்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
விளம்பர படத்தில் இருக்கும் மோடியின் முகத்தின் மீது கருப்பு சாயத்தை பூசியவர் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலேட் அல்ல. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார்.
விளக்கம்
தேர்தல் தொடங்க உள்ள நிலையில் கட்சிகளின் தொழில்நுட்ப பிரிவுகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு முரண்பட்ட செய்திகளை பதிவிடுகின்றனர். அதில், பிஜேபி ஆதரவாளர்களால் பரப்பப்பட்ட ” மோடியின் விளம்பர படத்தின் மீது கறுப்பு சாயம் ” பூசும் நபரின் படங்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வர் அல்லது முதல்வர் சச்சின் பைலட் விளம்பர படத்தில் மோடியின் முகத்தின் மீது கருப்பு பெயின்டை பூசுவதாகவும், இவர் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் என்றெல்லாம் கூறி பகிர்ந்தால் இந்தியா முழுவதிலும் இப்படங்கள் அதிக வைரல் செய்யப்பட்டது.
எனினும், அப்படத்தில் இருப்பவர் சச்சின் பைலட் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸின் தலைவர் சத்யஜீத் தம்பே ஆவார். இந்த சம்பவம் இப்பொழுது நடந்தவையும் அல்ல.
2018 அக்டோபர் மாதம் மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் படத்தில் மோடி முகத்தின் மீது சத்யஜீத் கருப்பு சாயத்தை பூசியுள்ளார்.
சத்யஜீத் தம்பே உடைய இத்தகைய செயலுக்கு மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ பிஜேபி ட்விட்டர் பக்கம் எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளது. ஒருபுறம் பிஜேபி கட்சியே சத்யஜீத்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தது, ஆனால், தற்போது அவர்களின் ஆதரவாளர்கள் அதே படத்தை வைத்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.