ராஜேந்திர பாலாஜி பேசியதை எடிட் செய்து பரப்பும் திமுக ஆதரவாளர்கள் !

பரவிய செய்தி
ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுக கூட்டம், உழைத்து பிழைக்கின்ற கூட்டம் திமுக கூட்டம் – ராஜேந்திர பாலாஜி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பிரச்சாரத்தின் போது, ” ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுக கூட்டம், உழைத்து பிழைக்கின்ற கூட்டம் திமுக கூட்டம் ” எனக் கூறியதாக 8 நொடிகள் கொண்ட எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மையை உடைத்த ராஜேந்திர பாலாஜி pic.twitter.com/RosEyWIPXw
— Venu Guna Panruti (@VenuGuna1) March 16, 2021
ராஜேந்திர பாலாஜி உண்மையை உடைத்ததாகக் கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இந்த வீடியோவில் அவர் பேசுகையில் கட் செய்யப்பட்டது தெளிவாய் தெரிகிறது. மேலும், வைரல் செய்யப்படும் வீடியோவில் DMK4TN எனும் ஹாஸ்டாக்கும் இடம்பெற்று இருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி பேசிய முழு வீடியோ மார்ச் 15-ம் தேதி பாலிமர் செய்தியில் வெளியாகி இருக்கிறது. அதில், ” இன்று ஸ்டாலின் அறிவித்து இருக்கும் தேர்தல் அறிக்கை எல்லாம் சீனி சக்கர சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்று தான் இருக்கிறது… ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம் திமுக கூட்டம்.. உழைத்து பிழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுக கூட்டம் ” என ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
இதன் காரணமாக, அவரின் பேச்சை அப்படியே மாற்றி எடிட் செய்த வீடியோவை வைத்து திமுகவினர் கிண்டல் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள். இவ்வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என சிலருக்கு தெரிந்தாலும், பலரும் இதை உளறல் பேச்சு, உண்மை பேச்சு என தவறாக புரிந்து கொண்டு பரப்பி வருகிறார்கள்.