பெரியார் படம் வெளியாக நடிகர் ரஜினிகாந்த் உதவினாரா ?| இயக்குனரின் பதில் !

பரவிய செய்தி
பெரியார் படம் வெளியாக வேலு பிரபாகரனுக்கு 5 லட்சம் குடுத்து உதவினார் என்பது கூடுதல் செய்தி. பகுத்தறிவு, கடவுள் மறுப்பை கூட பரப்ப உதவி செய்வது தான் ஆன்மிகம். அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிப்பது தான் ஆன்மீகம்.. தலைவர் ரஜினி.
மதிப்பீடு
விளக்கம்
பெரியார் , ரஜினி சர்ச்சைக்கு பிறகு சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி குறித்த செய்திகளே முதன்மையாகி போனது. அவற்றில் ஒன்றாக, பெரியார் படம் வெளியாக வேலு பிரபாகரனுக்கு 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் ரஜினி என்ற செய்தியுடன், இயக்குனர் வேலு பிரபாகரன் பேசும் வீடியோவும் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது பெரியார் திரைப்படத்தின் இயக்குனர் வேலு பிரபாகரன் அல்ல, எனினும் இயக்குனர் வேலு பிரபாகரனின் திரைப்படங்கள் பெரியார் கருத்துக்களைக் கொண்டதாக அமைந்து இருக்கும். இது தொடர்பாக இயக்குனர் வேலு பிரபாகரன் அளித்த பதிலையும், பெரியார் திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கூறியதையும் விரிவாக படிக்கவும்.
இயக்குனர் வேலு பிரபாகரன் நடிகர் ரஜினிகாந்த குறித்து பேசும் 2 நிமிட வீடியோவின் முழுமையான பதிவை தேடிய பொழுது, 2017-ல் மே மாதம் வெளியான ” velu prabhakaran supports rajini ” என்ற தலைப்பிலான முழு வீடியோ கிடைத்தது. அதில், 22-வது நிமிடத்தில் ரஜினிகாந்தின் டிரஸ்ட்டில் இருந்து 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டதாகவும், அதை வைத்து தான் போன படங்களை வெளியிட்டதாகவும் பேசியுள்ளார். அதில், பெரியார் படம் எனக் குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக யூடர்ன் தரப்பில் இருந்து இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” ரஜினிகாந்த் அவர்கள் பணம் கொடுத்து உதவியது பெரியார் திரைப்படத்திற்கு அல்ல. வேலு பிரபாகரனின் காதல் கதை எனும் திரைப்படத்திற்கு, எனினும் அந்த படமும் பெரியார் கருத்துக்களை தாங்கி இருந்தது. ஆனால், நான் பேசிய வீடியோவை சிலர் தவறாக பரப்பி உள்ளனர் ” என நம்மிடம் தெரிவித்து இருந்தார்.
பெரியார் திரைப்படம் :
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு நடிகர் சத்யராஜ் நடிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் “பெரியார்” . 2007-ம் ஆண்டில் வெளியான பெரியார் திரைப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரிக்க ஞான ராஜசேகரன் இயக்கினார். இந்த திரைப்படம் உருவாவதற்கு அன்றைய தமிழக அரசு சார்பில் 95 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
2007-ல் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் படம் பார்த்த பிறகுதான் தெரியாத விசயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது ? சாதி ஒழிப்பு, தீண்டாமை என எத்தனை நல்ல கொள்கைகள் இருக்கிறதே !. நான் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுத்துக் கொள்ளாமல் நல்ல கொள்கைகளை எடுத்துக் கொண்டேன் ” எனப் பெரியாரை ரஜினி பாராட்டி பேசி இருந்தார். மேலும், பெரியார் திரைப்படம் வெற்றியடைய தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, பெரியார் படம் வெளியாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்களுக்கு 5 லட்சம் அளித்ததாக பரவும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உதவியால் வெளியாகியது வேலு பிரபாகரனின் காதல் கதை எனும் திரைப்படம். எனினும், இந்த திரைப்படம் பெரியார் கருத்துக்களை சுமந்து உள்ளது.