ரஜினியுடன் இருப்பது போலீஸ் வேடத்தில் மாணவர்களை தாக்கியவரா ?

பரவிய செய்தி
ரஜினியின் ஆன்மீக அரசியல்.. போலீஸ் வேடத்தில் பெண்களை தாக்கிய ஆர்எஸ்எஸ் உறுப்பினர் உடன் ரஜினிகாந்த்.
சிஸ்டம் கெட்டு போச்சி …@rajinikanth pic.twitter.com/mHIwzXh6zA
— தமிழ் கிறுக்கு (@tamil_twtz) December 18, 2019
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது போலீஸ் உடையில் தாக்கிய நபர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி உடைய உறுப்பினர் என்றும், அவரின் பெயர் பாரத் சர்மா என முகநூல் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட் உள்ளிட்டவை இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் படிக்க : போலீஸ் வேடத்தில் வந்து மாணவர்களை தாக்குவது ABVP-ஐ சேர்ந்தவரா ?
ஆனால், போலீஸ் உடையில் இருக்கும் நபர் ஏபிவிபி உடைய உறுப்பினர் பாரத் சர்மா இல்லை என ஆதாரத்துடன் யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதற்கிடையில், போலீஸ் உடையில் பெண்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும், நடிகர் ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படம் என ஓர் மீம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
நடிகர் ரஜினிகாந்த் உடன் இருக்கும் நபர் போலீஸ் உடையில் மாணவர்களை தாக்கியதாக வைரலாகிய ஏபிவிபி உறுப்பினர் பாரத் சர்மாவோ அல்லது போலீஸ் உடையில் பெண்களை தாக்கியதாக கூறுவது போன்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும் அல்ல. அவரின் பெயர் ஆஷிஷ் சர்மா.
இன்ஜினியராக பணியாற்றி வந்த ஆஷிஷ் சர்மா தனது பணியினை விட்டு விட்டு, 2017 ஆகஸ்ட் 22-ம் தேதி நாட்டில் குழந்தைகள் பிச்சை எடுக்கும் அவலம் நீங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் 17,000 கி.மீ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஆஷிஷ் சர்மாவின் பயணத்தில் 569 நாட்களுக்கு பிறகு சென்னையை வந்தடைந்தார். அப்பொழுது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் சந்தித்ததாக livewire என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
மேலும், ஆஷிஷ் சர்மா, ரஜினிகாந்த மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு லதா ரஜினிகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் 2019 மார்ச் 12-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
Peace for Children: Foot soldier out on a mission to end begging BATHINDA: Ashish Sharma 27 yrs. The campaign,which began on August 22, will take at least a year to complete. During this period, the Delhi resident aims to walk 17,000 km across the length and breadth of India. pic.twitter.com/Ez3kIAnGdV
— Latha Rajinikanth (@OfficialLathaRK) March 12, 2019
மேலும், ஆஷிஷ் சர்மா தன்னுடைய 17,000 கிமீ நடைபயணம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு அளித்த பேட்டி 2019 பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
பிச்சை எடுக்கும் குழந்தைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நாடு முழுவதிலும் நீண்ட நடைபயணத்தை மேற்கொண்ட ஒருவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகளை பரப்பி உள்ளனர். தவறான புகைப்படங்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.