ரஜினியின் மக்கள் மன்றத்தால் சந்தோஷ் ராஜ் மிரட்டப்பட்டாரா..!

பரவிய செய்தி
தூத்துக்குடி இளைஞர் சந்தோஷ் ராஜ் ரஜினியின் மக்கள் மன்றத்தால் மிரட்டப்பட்டு நள்ளிரவில் 12.30 மணிக்கு மன்னிப்பு வீடியோ எடுத்ததாக சந்தோஷ் ராஜ் தாய் கூறியுள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடி இளைஞன் சந்தோஷ் ராஜ் வீடியோ பதிவு மூலம் தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கும், ரஜினியை நீங்கள் யார் என்று கேட்டதற்கும் விளக்கமளித்தார். அதில், “ ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் நான் கேட்டதை தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். அரசியல்வாதிகளுக்கு பதவி இருந்தால் மட்டுமே மதிப்பு. ஆனால், ரஜினிகாந்த் என்ற பெயருக்கே மதிப்பு அதிகம். மற்றவர்களை போல அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை. ஆகையால், நடந்த 100 நாள் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டு இருந்தால் எங்களுக்கு பலமாக இருந்து இருக்கும். இதை மனதில் வைத்தே அப்படி கேட்டேன். ஆனால், மீடியா உள்ளிட்டவர்கள் தவறாக சித்தரித்து உள்ளார்கள். இது முற்றிலும் என்னை பதித்துள்ளது “ என்று கூறினார்.
இந்த வீடியோ பதிவு ரஜினி மக்கள் மன்றம் செயலாளர் ராஜு மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தால் சந்தோஷ் ராஜ் மிரட்டப்பட்டு வீடியோ பதிவு வெளியாகியதாக அவரின் தாய் கூறியுள்ளனர் என சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. அதை பற்றி விரிவாக காண்போம்.
சந்தோஷ் ராஜின் தாய் :
நள்ளிரவில் 12.30 மணிக்கு தனது மகனை தனியாக அழைத்து சென்று வீடியோ பதிவு செய்துள்ளனர், அப்போது என் மகன் கவலையுடன் இருப்பதை பார்க்க முடிந்தது என்று சந்தோஷ் ராஜின் தாய் வசந்தி தெரிவித்துள்ளார். நர்ஸ் திட்டுவதை கேட்டு தூக்கத்தில் இருந்து திடீரென முழித்து பார்த்த பொழுது என் மகனுடன் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் இருவர் இருந்தனர். எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காக அவர்களை தெரியும் என்று நர்சிடம் கூறினேன் என்று கூறியுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூறியது பற்றி சந்தோஷ் அளித்த விளக்கம்,
ரஜினிகாந்த் அவர்களை தலைவர் என்றும், நான் அவரின் மிகப்பெரிய ரசிகன் மற்றும் அவர் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று கூற சொன்னார்கள். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு சென்னை சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அறிவுறுத்தப்பட்டேன். எதற்காக மரியாதை இல்லாமல் அவ்வாறு கேள்வி கேட்டாய் என்று கேட்டதற்கு, பதில் அளிக்கும் போதே வீடியோ எடுக்க அழைத்து சென்றனர். அவர்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர் என்று சந்தோஷ் கூறியுள்ளார்.
மிரட்டப்பட்டாரா ?
என்னிடம் செல்போனில் ஒருவருடன் பேச சொன்னார்கள். ஆனால், அது யார் என்று தெரியவில்லை. அவரிடம் நான் பேசும் பொழுது பயமுறுத்தும் வகையில் கோபமாகவும், வீடியோவில் பேசுமாறும் கூறினார். அங்கிருந்த இருவரும் ஆசை வார்த்தை கூறி பேசினார்கள். நான் பேசுவதற்கு கூட அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. என்னை சென்னைக்கு அழைத்து சென்று என் வாழ்க்கையை மாற்றுவதாகவும், உயர் படிப்புக்கு பண வசதி செய்து தருவதாகவும் சத்தியம் செய்தனர் என்று சந்தோஷ் கூறியுள்ளார்.
இதனால் தான் வீடியோ பதிவுக்கு ஒத்துக் கொண்டீர்களா ?
இல்லை, என்னை பற்றி வரும் தவறான வதந்திகளை நிறுத்த எண்ணினேன். இந்த விவகாரத்திற்கு பிறகு மீடியாவில் விளக்கம் கொடுத்தேன். எனினும், இவர்கள் இங்கே வந்து என்னை மிரட்டி உள்ளனர். அதனால் ஏற்றுக் கொண்டதாகக் குற்றம்சாற்றியுள்ளார். “ நான் அவரை தலைவர் என்று கூறவில்லை என்பதை வீடியோவில் பார்க்கலாம் “.
“ தவறு என்று தெரிந்தால் என் மகன் யாராக இருந்தாலும் வெளிப்படையாக கேள்வி கேட்பான், நானே தவறு செய்தால் கூட. ஆனால், தற்போது ஏன் அனைவவராலும் குறி வைக்கப்படுகிறான் “ என்று சந்தோஷ் ராஜின் தாய் வசந்தி தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் ராஜ் ரஜினிகாந்திடம் மட்டுமே இது போன்ற கேள்வியை கேட்டதாக தவறான பின்பத்தை உருவாக்கினர். ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களிடம் கூட யார் சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது, அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் எவ்வளவு பணம் வாங்கியது என்றும் கூட கேள்வி எழுப்பியதாக கூறியுள்ளார்.
மேற்கூறிய தகவல்களை சந்தோஷை தொடர்பு கொண்டு உறுதி செய்துக்கொண்டோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.