ரஜினிகாந்த் குடும்பம் செக் மோசடி செய்ததா ?| இணையத்தில் வைரலாகும் பதிவு!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் குடும்பம் 20 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராமல் செக் மோசடியில் ஈடுபட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியுடன் கூடிய பதிவு சமூக வலைதளத்தில் தற்போது வைரல் செய்யப்பட்டு வருகிறது. பூதம் எனும் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவை பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் மகள் சவுந்தர்யா ஆகியோரின் செக் மோசடி விவகாரம் குறித்து தேடிப் பார்க்கையில், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து உள்ளிட்டவையில் செய்தி வெளியாகி இருக்கிறது.
” நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் மகள் சவுந்தர்யா இருவரும் ” ஆக்சர் ஸ்டுடியோ ” பெயரில் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சுமர்சந்த் பாப்னா என்பவருக்கு சொந்தமான சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிதி நிறுவனத்திடம் இருந்து 2009-ம் ஆண்டு ஆகஸ்டில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். இந்த கடனுக்காக லதா மற்றும் சவுந்தர்யா தரப்பில் இருந்து 2010 டிசம்பர் 1-ம் தேதியிட்ட இரு செக்கள் சுமர்சந்த்க்கு வழங்கப்பட்டது. ஆனால், வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது. மேலும், பணத்தைத் திருப்பிக் கொடுப்பதிலும் இருவருமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, 2010 டிசம்பர் 24-ம் தேதி சுமர்சந்த் பாப்னா சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் லதா மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவரின் மீது ” செக் மோசடி ” வழக்கைத் தொடுத்தார். 2011-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு ஜனவரி 19-ம் தேதிக்குள் லதா மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனக் கூறி பிணையில் வெளியே வரக் கூடிய ” பிடிவாரண்ட் ” பிறப்பிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த உடனே லதா மற்றும் சவுந்தர்யா தரப்பில் 20 லட்சம் கடன் தொகை திரும்ப வழங்கப்பட்டது. மதியம் வழக்கைத் திரும்ப பெறுவதாக சுமர்சந்த் பாப்னா தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அவரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரவி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் “.
செக் மோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா மீது 2011-ல் தொடரப்பட்ட வழக்கில் காலையில் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போழுதே நீதிமன்றத்திற்கு வெளியே கடன் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வழக்கை திரும்ப பெற வைத்துள்ளனர். மாலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழில் தினமலரும் “ரஜினி மனைவி லதாவுக்கு காலையில் “பிடிவாரன்ட்’: மாலையில் வழக்கு தள்ளுபடி ” எனும் தலைப்பில் செக் மோசடி வழக்கு குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் களமிறங்குவதாகவும், புதிய கட்சி தொடங்குவதாகவும் வெளியிட்ட அறிவிப்பிற்கு பின்னர், லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஷ்ரம் பள்ளியை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது விவகாரம் செய்தியிலும், சமூக வலைதளத்திலும் வைரலாகின. மேலும், அவர்களின் ” ஆக்சர் ஸ்டுடியோ ” மீதான வழக்குகள் மற்றும் அது தொடர்பாக அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்புகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.