அசைவ உணவு சாப்பிடுபவர் ஒழுக்கம் இல்லாதவர் என ரஜினிகாந்த் பேசினாரா ?| Fact Check

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தான் நடத்துநராக இருக்கும் போது தினமும் மது குடிப்பேன், புகை பிடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றியது என் மனைவி லதா தான் எனக் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
சிகரெட் மது உடலுக்கு கேடு அசைவ உணவு எப்படி ஒழுக்கத்துக்கு எதிரானது ரஜினி விளக்குவாரா? pic.twitter.com/HZXkNm4mS2
— Siva (@Siva52750130) January 26, 2023
அப்படியெனில் மாமிசம் சாப்பிடுபவர்களை ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும், அசைவ உணவு தீய பழக்கம் என்றும் ரஜினி கூறுகிறாரா? எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மது,புகை, அசைவ உணவு ஆகிய தீய பழக்கங்களிலிருந்து என் மனைவியால் மாற்றப்பட்டேன்.- ரஜினி
அசைவ உணவு தீய பழக்கமா………. pic.twitter.com/5LxsS6rrnu
— 『мR』𝙼.𝙱𝙰𝙻𝙰 (@MBALA72630567) January 27, 2023
உண்மை என்ன ?
ரஜினிகாந்த் மது, சிகரெட், மாமிசம் குறித்து சமீபத்தில் ஏதேனும் நிகழ்ச்சியில் பேசினாரா என்பது குறித்து இணையத்தில் தேடினோம்.
ஜனவரி 26ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்ற ஒய்.ஜி.மகேந்திரனின் “சாருகேசி” நாடக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு நாடகத்தில் நடித்த நடிகர்களையும் கௌரவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய முழு வீடியோவை ‘Thi Cinemas’ என்ற யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது. அவ்வீடியோவில் ஒய்.ஜி.மகேந்திரன் பற்றியும், சாருகேசி நாடகம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது பற்றியும் பாராட்டிப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, 12வது நிமிடத்திற்கு மேல் அவரது மனைவி லதா பற்றிப் பேசுகிறார்.
அதில், “இது குடும்ப விழா என்பதற்காக நான் இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன். 73 வயதிலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் என்னுடைய மனைவிதான்.
நான் கண்டக்டராக இருக்கும் போது கெட்ட சினேகிதர்கள் சகவாசத்தினால் கெட்ட பழக்கங்களை வைத்திருந்தேன். இரண்டு வேலையும் நாண் வெஜிடேரியன் தான் வேணும், அதுவும் மட்டன் தான் வேணும். டெய்லி தண்ணி போடறது, சிகரெட் எத்தன பாக்கெட்னு தெரியாது. இன்னும் பணம், பேர், புகழ் வந்த போது எப்படி இருந்திருப்பேன் என நினைத்துப் பாருங்கள்.
காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65. வெஜிடேரியன்ஸ் பார்த்தால் பாவமாக இருக்கும். இந்த ட்ரிங்க்ஸ், சிகரெட், நாண் வெஜிடேரியன் இது மூன்றும் டெட்லி காம்பிநேஷன். இதனை அளவு மீறி, தொடர்ந்து பல வருடங்கள், இந்த மூன்றையும் செய்தவர்கள் யாரும் எனக்குத் தெரிந்து 60 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது. அப்படி வாழ்ந்தாலும் படுத்த படுக்கையாக வாழ்கிறார்கள். நடமாட முடியாது.
அந்த மாதிரி இருந்த என்னை, அன்பால் மாற்றியவர் லதா. இந்த மாதிரி பழக்கங்களை என்ன சொன்னாலும் விட முடியாது. அதை அவ்வளவு அன்பாக, சரியான மருத்துவர்களை அறிமுகப்படுத்தி, எனக்கு ஒழுக்கத்தைக் கொண்டுவந்து, என்னை மாற்றியவர் லதா அவர்கள்” எனப் பேசி உள்ளார்.
மது குடிப்பது, புகையிலை புகைப்பது மற்றும் மாமிசம் சாப்பிடுவது இவை மூன்றும் சேர்ந்தது ஒரு கொடிய சேர்க்கை (Deadly combination) என்றுதான் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் எந்தவொரு இடத்திலும் மாமிசம் சாப்பிடக் கூடாது என்றோ, மாமிசம் சாப்பிடாதவர்கள் ஒழுக்கமானவர்கள் என்றோ கூறவில்லை. இதிலிருந்து அவர் பேசியதைத் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், நடிகர் ரஜினிகாந்த் மாமிசம் சாப்பிடுவதற்கு எதிராகப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்து உண்மை அல்ல. அவர் மது, புகையிலை, மாமிசம் ஆகிய மூன்றும் ஒரு மோசமான சேர்க்கை என்று பேசியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.