ராஜீவ், சோனியா காந்தி திருமணம் இஸ்லாம் முறைப்படி நடந்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
காங்கிரஸ் கட்சி குடும்பம், நம் நாட்டில் இதுவரை போட்டது எல்லாமே வேஷங்கள் தான்..இதோ உண்மையான முகம் இதுதான்.. அப்புறம் எப்படி இந்துக்கள் நலன் பற்றிய சிந்தனை வரும்..
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் பிரதமர் நேருவின் குடும்பத்தினரான ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல போலி செய்திகளை வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பரப்புகின்றனர். அவற்றின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜீவ்காந்தி மற்றும் சோனியா காந்தியின் திருமணம் இஸ்லாம் முறைப்படி நடைபெற்றதாகப் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர். அப்படத்தில், “ராஜீவ்.. சோனியா நிக்ஹா புகைப்படம்.. இப்ப தெரியுதா இவனுங்களோட தேசப்பற்று” எனத் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
ராஜீவ்காந்தியின் இஸ்லாம் முறையிலான திருமண புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அப்புகைப்படம் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மேற்கொண்டு 1968ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெற்ற ராஜீவ்காந்தி மற்றும் சோனியா காந்தியின் திருமணம் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ குறித்து இணையத்தில் தேடினோம். NDTV மற்றும் நியூஸ் 18 ஆகிய இணையதளங்களில் வீடியோவுடன் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
‘British Movietone’ என்னும் யூடியூப் பக்கத்தில் உள்ள அந்த வீடியோவில் ராஜீவ்காந்தி மற்றும் சோனியா காந்தி திருமணப் பதிவு புத்தகத்தில் கையொப்பம் இடுகின்றனர். பின்னர் தங்களின் திருமணத்தைக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டுகின்றனர்.
அதேபோல் ராஜீவ்காந்தி, சோனியா காந்தி திருமண புகைப்படங்களை வீடியோவாக ‘papoinews’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஓர் புகைப்படத்தில் அவர்கள் இருவரும் இந்து முறைப்படி நெற்றியில் திலகம் வைத்துள்ளதைக் காண முடிகிறது.
ராஜீவ்காந்தி மரணத்தைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கில் இந்து முறைகளே பின்பற்றப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவரது அஸ்தியும் இந்து முறைப்படி புனித நதியில் ராகுல் காந்தி கரைத்துள்ளார். அவருடன் தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் இருப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.
ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் திருமணமும் இந்து முறைப்படியே நடைபெற்றுள்ளது. அவரது திருமண புகைப்படங்கள் ‘Aajtak’ என்னும் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சோனியா காந்திக்குப் பின்னால் “இந்தியாவைக் கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி” என்ற புத்தகம் இருந்ததா ?
முன்னதாக சோனியா காந்தி இந்தியாவைக் கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி என்னும் புத்தகத்தை வைத்துள்ளார் என்றும், இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும் போலி செய்திகள் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
முடிவு :
நம் தேடலில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சோனியா காந்தியின் திருமணம் இஸ்லாம் முறைப்படி நடந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர்களது திருமண வீடியோவில் அப்படி எந்த நிகழ்வும் இல்லை என்பதை அறிய முடிகிறது.