ராம் ஐயர் கடையில் அசைவ உணவு விற்பதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
பல்வேறு தரப்பு மக்களும் வந்து செல்லும் கடைகளுக்கு ஜாதியைக் குறிப்பிடும் வகையில் பெயர் வைக்கக்கூடாது என பல்வேறு முற்போக்கு இயக்கத்தினரும் நீண்டகாலமாகக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ‘ராம் ஐயர் டிபன் கடை’ எனப் பெயரிடப்பட்ட ஒரு உணவகம் ‘சைவம் மற்றும் அசைவ’ உணவினை விற்பனை செய்வதாகக் கடையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடையின் பெயரில் ஐயர் எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர்களே அசைவத்திற்கு மாறிவிட்டார்கள் என்ற குறிப்புகளுடன் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
சைவம் மற்றும் அசைவ உணவினை ஒரே கடையில் விற்பனை செய்யும் பல உணவகங்கள் உள்ளன. ஆனால், கடையின் பெயரில் ‘ஐயர்’ எனக் குறிப்பிட்டு அசைவ உணவு விற்பனை செய்வார்களா என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமின்றி கடையின் பெயர்ப் பலகையில் சைவ உணவு என்பதைக் குறிப்பிடும் வகையில் பச்சை நிற குறியீடும் உள்ளதைக் காண முடிகிறது.
இதனைத் தொடர்ந்து அக்கடையின் பெயரைக் கூகுளில் தேடினோம். ‘Caresurfer AK’ என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, ‘Ram iyer tiffin shop @west mambalam’ வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அவ்வீடியோவில் காட்டப்படும் விலைப்பட்டியலில் ஒரு வயதான தம்பதியரின் புகைப்படம் உள்ளது. அதே புகைப்படம் பரவக் கூடிய பெயர்ப் பலகையிலும் உள்ளது. அந்த விலைப்பட்டியலில் அசைவ உணவு வகை எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், தங்களது புதிய உணவகத்தை மேற்கு (West) கே.கே.நகரில் திறக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு கூகுள் மேப்பில் தேடினோம்.
2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவிடப்பட்ட அக்கடையின் வேறு சில புகைப்படங்கள் கிடைத்தது. அதில், ‘ராம் ஐயர் டிபன் கடை’ எனத் தமிழில் உள்ள பெயருக்குக் கீழே ‘PURE VEG RESTAURANT’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து பரவக் கூடிய புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : நடிகர் மாதவனின் ட்வீட்: மாட்டுக்கறியை விட கிட்னி பீன்ஸில் சத்துக்கள் அதிகமா ?
முடிவு :
நம் தேடலில், ராம் ஐயர் டிபன் கடை என்னும் உணவகம் அசைவம் விற்பனை செய்வதாகப் பரவும் பெயர்ப் பலகை எடிட் செய்யப்பட்டது. அந்த உணவகம் சைவ உணவினை மட்டுமே விற்பனை செய்கிறது என்பதை அறிய முடிகிறது.