அயோத்தியில் ராமர் கோவில் & பாபர் மசூதி கட்ட வாக்கெடுப்பா ?

பரவிய செய்தி
அயோத்தியில் ராமமந்திர், பாபர் மசூதி கட்ட ஆன்லைன் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றம் அயோத்தி விவகாரத்தில் முடிவை மக்களிடத்தில் விட்டு விட்டது. தற்போது பாபர் மசூதிக்கு அதிக ஓட்டுகள் அளிக்கின்றனர். எனவே, இந்துக்கள் ராமர் கோவில் கட்ட ஓட்டு அளியுங்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் & பாபர் மசூதி கட்ட வாக்கெடுப்பு எனக் கூறி சமூக வலைதளங்களில் பரவும் பார்வர்ட் செய்திகள் போலியானவையே. இதேபோன்று போலியான இணையதள முகவரியும் பரவி வருகிறது.
விளக்கம்
வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியில் ராமர் கோவில், பாபர் மசூதி கட்டுவது தொடர்பான பிரச்சனைகள் நாட்டையே உலுக்கியவை. அத்தகைய விவகாரத்தில் முடிவை மக்களிடத்தில் உச்ச நீதிமன்றம் விட்டதாகக் கூறுவதை யாவரும் நம்பமாட்டார்கள். அவ்வாறான தீர்ப்பும், செய்தியும் வெளியாகவில்லை.
இருப்பினும், ராமர் கோவில் கட்ட ஆதரவு வேண்டி பரவும் இதுபோன்ற செய்திகளை மதப்பிரச்சனையை உருவாக்கவோ, மத உணர்வை மேலோங்கச் செய்யவோ அல்லது வியாபாரரீதியான செயலாகவோ தான் பார்க்க வேண்டும்.
முதலில் வாட்ஸ் ஆஃப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் இவ்வாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம், அதில் கொடுக்கப்படும் லிங்க்-ல் சென்று பார்க்கவும் வேண்டாம்.
இணையதள பார்வைக்காக இம்மாதிரி முயற்சிகள் செய்வதுண்டு. இந்த பார்வர்ட் செய்தியுடன் தொடர்புடையதாக உத்திரப்பிரதேச அரசின் இணையதளம் எனக் கூறியும் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்படுகிறது.
www.ayodhya-issue.gov-up.in என்ற இணைய முகவரியை உத்தரபிரதேச மாநில அரசின் வாக்கெடுப்பு போன்று போலியாக உருவாக்கியுள்ளனர். அதில், அளிக்கப்பட்ட விவரங்கள் போலியானவை.
அயோத்தி விவகாரத்தைக் கொண்டு மத உணர்வை தூண்டவே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது. அயோத்தி விவகாரம் போன்று ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வாக்கெடுப்பு அல்லது புகார் அளிக்க என பரவும் பார்வர்ட் செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம்.