கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என தவறாக பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு இந்த பாய்ங்க தொல்ல தாங்க முடியலப்பா.. இந்த வீடியோவை பகிர்பவர்களுக்கு கொரோனா தாக்கும் இப்படிக்கு சங்கீ.
மதிப்பீடு
விளக்கம்
ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராம்ஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிலையில், கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என கீழ்காணும் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை அறிய தீர்மானித்தோம்.
InVID மூலம் கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என பரப்பப்படும் 30 நொடிகள் கொண்ட வீடியோவில் இருந்து ஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் யூடியூப் சேனல்களில் இவ்வீடியோ இடம்பெற்று இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.
காவிக் கொடிகள், டிஸ்க்கோ உபகரணங்கள் உடன் கூட்டமாய் ஆடிப்பாடும் மக்களின் வீடியோ 2019-ல் டிக்டாக், ஹலோ அப், ஷேர்சாட், யூடியூப் உள்ளிட்டவையில் அதிகம் பகிரப்பட்டு உள்ளது. ஷேர் சாட் செயலில் பின்னனியில் வேறு பாடலைக் கொண்டு வெளியான வீடியோவை யூடியூப் உள்ளிட்டவையில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
பழைய வீடியோ என உறுதி செய்ய முடிந்தாலும், மக்கள் கூட்டமாய் கொண்டாட்டத்தில் இருக்கும் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என பரப்பப்படும் வீடியோ கடந்த ஆண்டில் வைரலாகி உள்ளது என்பதையும், இதற்கும் கொரோனா காலத்திற்கும் தொடர்பில்லை என தெளிவாய் தெரிகிறது.