அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஸ்பெயினில் கொண்டாட்டமா ?

பரவிய செய்தி
ஸ்பேயின் நாட்டு மக்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவதை முன்னிட்டு மகிழ்ச்சியில் கொண்டாட்டம்.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்க உள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக ஸ்பெயின் நாட்டில் இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது என நாரதர் எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் மொழியில் மட்டுமின்றி பிற மொழிகளில் இந்திய அளவில் இவ்வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஆகையால், இவ்வீடியோவில் இடம்பெற்ற நிகழ்ச்சி எதற்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது என ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வீடியோவின் லிங்கை வைத்து InVID டூல் மூலம் கீ ஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இவ்வீடியோ யூடியூப் உள்ளிட்டவையில் இடம்பெற்று உள்ளதை பார்க்க முடிந்தது. மேற்கொண்டு தேடுகையில், 2018-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி ” swargandhar dhol tasha pathak ” எனும் யூடியூப் சேனலில் இவ்வீடியோ பதிவாகி உள்ளதை பார்க்க முடிந்தது.
” swargandhar dhl tasha pathak ” என்கிற கீ வார்த்தையைக் கொண்டு தேடிய பொழுது 2018 midway எனும் இணையதளத்தில், ” மும்பையைச் சேர்ந்த புனேரி தொல் தாஷா குழு, ஸ்பெயின் நாட்டில் லொரேட் டி மார் நகரில் யுனெஸ்கோ உடன் சேர்ந்து நடத்தப்பட்ட நாட்டுப்புற இசை விழாவான சர்வதேச நாட்டுப்புற விழாவில் கலந்து கொண்டு உள்ளனர். அக்குழு கலந்து கொண்டு நிகழ்த்திய இசை நிகழ்ச்சியே இது.
2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில், 2018-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் மும்பையைச் சேர்ந்த இசை குழுவினர் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், ஸ்பெயின் நாட்டு மக்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவதை முன்னிட்டு மகிழ்ச்சியில் கொண்டாட்டம் என வைரல் செய்யப்படும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச நாட்டுப்புற விழாவில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.