This article is from Dec 27, 2019

ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ?| வரலாறு அறிக.

பரவிய செய்தி

இது கோயில் இல்லை ராமநாதபுரம் குளச்சலில் உள்ள ஜிம்மா மசூதி.. திமுக, திக, காங்கிரஸ் திருடனுங்க பேசும் மதச்சார்பின்மை பேசிட்டு இருந்தா நாளை நாமும் இது போன்று அடையாளத்தை இழக்க நேரிடும்…

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலாக இருந்து, பின்னர் இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டதாக ஓர் கருத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிது.

இதற்கு முன்பாக, இந்து கோவில்களில் உள்ள தூண்கள் மற்றும் அமைப்புகளை போன்று இருக்கும் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தனர். தற்பொழுது, ” இது கோயில் இல்லை ராமநாதபுரம் குளச்சலில் உள்ள ஜிம்மா மசூதி. திமுக, திக, காங்கிரஸ் திருடனுங்க பேசும் மதச்சார்பின்மை பேசிட்டு இருந்தா நாளை நாமும் இது போன்று அடையாளத்தை இழக்க நேரிடும் ” என்ற வாசகத்துடன் ஜும்மா பள்ளிவாசலின் புகைப்படத்தை பகிர்ந்து வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பழமையான ஜும்மா பள்ளிவாசல் ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் உள்ளது . கீழக்கரையில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் குறித்து பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. கீழக்கரை நடுத்தெருவில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், 17-ம் நூற்றாண்டில் ராமநாதபுரத்தில் ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதி காலத்தில் அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதியால் மத வேறுபாடுகளின்றி திராவிடக் கட்டிடக்கலை முறையில் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன .

அப்பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடல்வழி மார்க்கமாக வியாபாரம் செய்ய வந்த பெருவணிகர்களாக இஸ்லாமியர்கள் இருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் குறித்து அப்பள்ளிவாசலின் ஒன்பதாவது காஜியான காதர் ஹுசைன் என்பவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில்,

” இந்து கோவில்களில் சிலைகள் இருக்கும். இது பள்ளிவாசல் என்பதால் ஒவ்வொரு தூணிலும் பூ அலங்காரம் செதுக்கப்பட்டு உள்ளது. இவ்விரண்டு இடங்களுக்கும் பொதுவாக இருப்பது திராவிடக் கட்டிடக்கலை. இந்த பள்ளிவாசல் ஐந்து வாசல்கள் மற்றும் சுமார் 300 பேர் தொழுகை செய்யும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. வள்ளல் சீதக்காதி காலத்தில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டதோ, அதே வடிவத்தில் இன்றும் பாதுகாத்து வருகிறோம். கோவில்களில் வேலை செய்யும் கட்டிடக்கலை நிபுணர்களை கொண்டே பள்ளிவாசலின் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பள்ளிவாசல் வரலாற்று ஆதாரத்துடன் விளங்குவதால், வடிவமைப்பு குறித்த எந்த சந்தேகமும் யாருக்கும் எழுந்ததில்லை ” எனக் கூறியுள்ளார்.

கிழவன் சேதுபதி மற்றும் வள்ளல் சீதக்காதி ஆகிய இருவரின் நட்பினால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத வேறுபாடுகள் இன்றி தமிழ் இனத்தவராக வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். கீழக்கரையில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மட்டும் திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கப்படவில்லை. அப்பகுதியில் உள்ள பழமையான பல பள்ளிவாசல்கள் திராவிடக் கட்டிடக்கலையில் இருப்பதாக பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Youtube link | archived link

2008-ம் ஆண்டில் யூடியூப் சேனல் ஒன்றில் ” jumma mosque Kilakarai (ஜும்மா மசூதி, கீழக்கரை)” என்ற தலைப்பில் வெளியான வீடியோவில், கீழக்கரை ஜும்மா மசூதியின் ஒவ்வொரு பகுதிகளையும் காண்பித்து விளக்கி இருந்தனர். தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கீழக்கரையில் உள்ள பழமையான பள்ளிவாசல் குறித்து நியூஸ் 7 சேனலில் வெளியான வீடியோவில் மற்றொரு பள்ளிவாசலை காணலாம்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ராமநாதபுரம் மாவட்டம் குளச்சல் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், குளச்சல் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும், புகைப்படத்தில் இருக்கும் தொழுகை செய்யும் இடம் கீழக்கரையில் உள்ள ஜும்மா பள்ளிவாசலை போல் இல்லை. எனினும், பழங்கால கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல் என்பதை தூண்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

கீழக்கரையில் இருக்கும் ஜும்மா பள்ளிவாசல் 17-ம் நூற்றாண்டில் திராவிடக் கட்டிடக்கலையில் வள்ளல் சீதக்காதியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல். இந்த வரலாற்று உண்மையை அப்பகுதி மக்கள் அறிந்து உள்ளார்கள்.

ஆனால், அதைப் பற்றி அறியாமல், பள்ளிவாசல் பகுதியில் தொழுகை செய்யும் இடத்தில் இருக்கும் தூண்களின் அமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு இந்து கோவில்களில் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அரசியல் சார்ந்து மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை உருவாக்க தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader