ராமநாதபுரத்தில் கோவிலை சர்ச் ஆக மாற்றி உள்ளார்களா ?| எங்கு அமைந்துள்ளது ?

பரவிய செய்தி
ராமநாதபுரத்தில் உள்ள கோவிலை மதம் மாற்றும் கிறிஸ்துவ கை கூலிகள் சர்ச் ஆக மாற்றி இந்து மத வழிபாட்டு தளங்களை சீர்குலைத்து கொண்டு உள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
ராமநாதபுர மாவட்டத்தின் அதியமான் பகுதியில் அமைந்துள்ள கோவிலை சர்ச் ஆக மாற்றி உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவில் போன்ற கோபுர வடிவமைப்பைக் கொண்ட கட்டிடத்தில் கலசத்துடன், சிலுவையும் அமைக்கப்பட்டு உள்ளது. ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து சமயம் உள்ளிட்ட பக்கங்களில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
In Adhiyaman, Ramanathapuram, TN Missionery stooges have occupied the most ancient Hindu Temple!
Kalasam Replaced by cross
In spite of the vast majority of Hindus in TN. pic.twitter.com/vgRDozsoP1— Indu Makkal Katchi ( Official ) (@Indumakalktchi) June 27, 2020
கோவிலை சர்ச் ஆக மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அறநிலையத்துறை மீது வசைப்பாடியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சிலருக்கு இக்கட்டிடம் எங்கு அமைந்துள்ளது என்ற உறுதியான விவரம் தெரியாவில்லை. யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் இக்கட்டிடத்தின் உண்மைத்தன்மை குறித்து கேட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
ராமநாதபுரத்தில் அதியமான் பகுதில் உள்ள கோவில் கட்டிடமா என ஆராய்ந்து பார்த்த போது அப்படி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கோவிலை சர்ச் ஆக மாற்றியுள்ளார்கள் என கண்டனம் தெரிவித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவின் கீழ் ஒருவர் இந்த கோவில் முகவரி குற்றாலம் தமிழ்நாடு என்றும், கூகுள் லிங்கையும் இணைத்து இருந்தார்.
@trramesh Sir this temple address is Courtallam, Tamil Nadu 627802
GOOGLE MAPS LINK https://t.co/tULwL3VFk9— sai priya (@Priya_27_) June 27, 2020
கூகுள் லிங்கில் சென்று பார்க்கையில், குற்றாலத்தில் அமைந்துள்ள என்எம்எஸ்ஐ கிறிஸ்தவகுல ஆசிரமத்தின் புகைப்படங்கள் பல கிடைத்தன. அதில், தற்போது வைரலாகும் புகைப்படத்தில் உள்ள கட்டிடம் வண்ணம் பூசப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சில இடம்பெற்று உள்ளன.
கட்டிட அமைப்பு கோபுரம் மற்றும் கலசம் ஆகியவற்றுடன் அமைந்து இருந்தாலும், தூண்களில் சிலுவை பொறிக்கப்பட்டு உள்ளதை பார்க்கலாம். 2013-ம் ஆண்டு suresh & grace ministry update எனும் முகநூல் பக்கத்தில், இந்திய பாணியில் சர்ச் எனக் குறிப்பிடப்பட்டு இதே புகைப்படம் பதிவாகி இருக்கிறது. அதேபோல, மற்றொரு புகைப்படத்தில் உட்பகுதியை காணலாம்.
தமிழகத்தின் குற்றாலத்தில் உள்ள என்எம்எஸ்ஐ கிறிஸ்தவகுல ஆசிரமத்தில் அமைந்திருக்கும் கட்டிடமே தற்போது வைரலாகி வருகிறது என தெரிந்து கொண்டோம். பழமையான இந்தியக் கட்டிடக்கலையில் தூண்களை வைத்து கட்டும் வழக்கம் உள்ளது. கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் இந்து மதத்தில் மற்றும் இங்குள்ள பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடித்து வருவதையும் பார்க்க முடியும். அது சரியா தவறா என்கிற விவாத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை. ஆனால், தமிழகத்தில் மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இங்குள்ள கட்டிடக்கலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டு உள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
திருப்பத்தூர் பகுதியில் உள்ள மற்றொரு ” கிறிஸ்தவகுல ஆசிரமம் ” பழங்காலக் கட்டிடக்கலைக்கு ஏற்ப 1928-ம் ஆண்டு துவங்கப்பட்டு 1933-ம் ஆண்டில் முடிவடைந்ததாக மேற்காணும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆசிரமத்தின் கட்டிடமும் கோபுரம் மற்றும் தூண்களை கொண்டிருக்கிறது. ஆனால், தூண்களில் சிலுவைகள் பொறிக்கப்பட்டு உள்ளதை பார்க்கலாம்.
மேலும் படிக்க : ஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா ?| ஃபேஸ்புக் பதிவு .
இதேபோல் ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள மஸ்ஜித் போன்றவை இந்து கோவிலை இடித்து கட்டியதாக தூண்களை சுட்டிக்காட்டினர். ஆனால், அவை பழங்காலக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் என நாம் ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ?| வரலாறு அறிக.
முடிவு :
நம்முடைய தேடலில், ராமநாதபுரத்தில் உள்ள கோவிலை கிறிஸ்துவர்கள் சர்ச் ஆக மாற்றி உள்ளார்கள் என கூறும் தகவல் தவறானது. அது குற்றாலத்தில் உள்ள என்எம்எஸ்ஐ கிறிஸ்தவகுல ஆசிரமத்தில் உள்ள கட்டிடம் என அறிந்து கொள்ள முடிந்தது.