தெருவில் ஒலித்த ராம பஜனைக்கு மசூதியில் இருக்கும் சிறுவன் நடனமா ?

பரவிய செய்தி
தெருவில் – ஸ்ரீராமர் ஊர்வல பஜனை பாடல்.. மசூதிக்குள் இருக்கும் சிறுவனின் ரசனை.
மதிப்பீடு
விளக்கம்
தெருவில் ஒலித்த ஸ்ரீராமர் ஊர்வல பஜனை பாடலுக்கு மசூதிக்குள் இருக்கும் சிறுவனின் ரசனை என சிறுவன் அமர்ந்தபடியே ரசனையுடன் நடனமாடும் 1.40 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சிறுவனின் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 நவம்பர் 18-ம் தேதி பிரபல பாடலுக்கு சிறுவன் நடனமாடுவதாக இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகளில் வெளியான இதே வீடியோ கிடைத்தது. ஆனால், அந்த செய்தியில் இடம்பெற்ற வீடியோவின் பின்னணியில் ஒலித்த பாடலும் எடிட் செய்யப்பட்டவையே என இந்தியா டுடே ட்வீட் செய்து இருக்கிறது.
It has been brought to our notice that this is an edited video. The child wasn’t grooving to Dama Dam Mast Qalandar sufi song.
— IndiaToday (@IndiaToday) November 19, 2020
2020ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி Mod Usril என்பவரின் முகநூல் பக்கத்தில் சிறுவனின் முழுமையான 2 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், ராம பஜனை பாடல் பின்னணியில் ஒலிக்கவில்லை. மாறாக, அங்குள்ள வழிபாட்டு பாடலே ஒலிக்கிறது.
மேற்காணும் வீடியோவை பதிவிட்டவர் இந்தோனேசியா நாட்டின் மஞ்சலெங்கா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவில் உள்ள மசூதியில் நடைபெற்ற வழிபாட்டில் சிறுவன் ரசனையுடன் ஆடிய வீடியோ இந்தியாவில் ஆடியோ எடிட் செய்து மீண்டும் மீண்டும் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், தெருவில் ஸ்ரீராமர் ஊர்வல பஜனை பாடலுக்கு மசூதிக்குள் இருக்கும் சிறுவனின் ரசனை என பரப்பப்படும் வீடியோவின் பின்னணியில் இருக்கும் ஆடியோ எடிட் செய்யப்பட்டது. இது இந்தியாவைச் சேர்ந்த வீடியோவே அல்ல என அறிய முடிகிறது.