இராமாயண படத்தில் ராமர் மற்றும் சீதையாக நடித்தவர்கள் புத்த மதம் தழுவினார்களா ?

பரவிய செய்தி
இராமாயண படத்தில் ராமர் வேடத்தில் நடித்த ககன் மாலிக், சீதா வேடத்தில் நடித்த தீபிகா சிக்காலியா ஆகியோர் புத்த மதத்தை தழுவியுள்ளனர்.Facebook link
மதிப்பீடு
விளக்கம்
இராமாயணத்தில் ராமனாக நடித்த ககன் மாலிக்கும், சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவும் புத்த மதத்தைத் தழுவியதாக மூன்று வெவ்வேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ராமாயண படத்தில் ராமர் வேடத்தில் நடித்த ககன் மாலிக், சீதா வேடத்தில் நடித்த தீபிகா சிக்காலியா ஆகியோர் புத்த மதத்தை தழுவியுள்ளனர் pic.twitter.com/Lye1DqQ8rG
— syed (@yusufsyedb) May 26, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய தகவல் குறித்த கீவேர்டுகளை கொண்டு இணையத்தில் தேடியதில், இராமாயணம் சீரியலில் நடித்த நடிகர் ககன் மாலிக், பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற வாட் தட் தாங் கோவிலில் இரண்டு வாரக் காலம் புத்த துறவு மேற்கொண்டது தொடர்பாக ‘Deccan Chronicle’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
‘ஸ்ரீ சித்தார்த்த கௌதம’ படத்தில் கௌதம புத்தராக நடித்த பிறகு பௌத்த ஆர்வலராகியுள்ளார். அவர் பௌத்த மதத்தின் மீது ஆர்வமாக இருப்பதை அவரது சமூக வலைத்தள பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது.
மேலும், பரவக் கூடிய படத்தில் இருக்கும் ககன் மாலிக் புகைப்படம் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘National Network of Buddhist Youth Pune Group’ எனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பௌத்த நடிகர் ககன் மாலிக்கிற்கு இன்று பிறந்தநாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இராமாயணம் திரைப்படத்தில் நடித்த தீபிகா சிக்லியா பௌத்த மதம் தழுவியதாக எந்த செய்திகளும் கிடைக்கவில்லை. அவருக்குப் பின்னால் புத்தர் சிலை இருப்பது போன்ற புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி பதிவிட்டுள்ளார். அவர் புத்தர் படத்துடன், சிலையுடன் இருப்பது போன்றோ, புத்தமத நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்றோ வேறு எந்த பதிவுகளும் அவரது பக்கத்தில் இல்லை.
View this post on Instagram
‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ 2020, ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள கட்டுரையில் அவர் அரசியல் கட்சியில் இருப்பதாகவும், தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட வீடியோக்களையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. இவற்றைத் தவிர, ராமரை வணங்குவது போன்ற வீடியோக்களும் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.
பரவக் கூடிய படத்தில் ராமர் சீதை வேடத்தில் இருப்பவர்கள் குறித்துத் தேடியதில், அதில் இருப்பது நடிகர் ககன் மாலிக் மற்றும் நடிகை ஷிவ்யா பதானியா என்பதை அறிய முடிந்தது. சீதையின் வேடத்தில் இருப்பது தீபிகா சிக்லியா அல்ல. இதுகுறித்து, 2022ல் ‘Siddhant Samachar’ வெளியிட்ட செய்தியில் சீதையாக வேடமிட்ட ஷிவ்யா பதானியாவை அயோத்தியில் நடைபெற்ற தீபோத்ஸவ விழாவிற்கு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், இராமாயணம் தொடரில் நடித்த நடிகர் ககன் மாலிக் பௌத்தத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதும், அவர் இரண்டு வாரங்கள் புத்த துறவு மேற்கொண்டதும் உறுதியாகிறது.
ஆனால், இராமாயணம் படத்தில் நடித்த நடிகை தீபிகா சிக்லியா புத்த மதம் மாறவில்லை. மேலும் பரவக் கூடிய படத்தில் சீதை வேடமிட்டுள்ளவர் நடிகை ஷிவ்யா பதானியா என்பதையும் அறிய முடிகிறது.