அயோத்தியில் கிடைத்த 5 அடி சிவலிங்கத்தின் புகைப்படமா ?

பரவிய செய்தி
அயோத்தியாவின் ராம்ஜென்மபூமியில் தோண்டி எடுக்கப்பட்ட 5 அடி சிவலிங்கம்.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை துவங்கப்பட்ட நிலையில் நிலத்தை தோண்டிய பொழுது பழங்கால தூண்கள், அலங்கார சிற்பங்கள், 5 அடி உயர சிவ லிங்கம் கிடைத்ததாக பரபரப்பான செய்தி வெளியாகியது. அப்படி கிடைத்த சிவலிங்கத்தின் புகைப்படம் என சிவலிங்கம் ஒன்று கட்டித் தூக்கப்படும் நிலையில் இருக்கும் கீழ்காணும் படம் இந்திய அளவில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல மொழிகளில் வைரலாகி வருகிறது.
भगवान #श्रीराम जिस #शिवलिंग की पूजा करते थे वो मिला #अयोध्या की #खुदाई में
देवाधिदेव #महादेव बाबा #महाकाल की #जय हो
🚩🐅जय #श्रीराम🐅🚩कहाँ गए #भैया वो लोग जिन्हें #प्रमाण चाहिए था
हमारे #आराध्य_प्रभू श्रीराम का pic.twitter.com/AzkuJGxhPe— n.l jangid (@JangidNn) May 24, 2020
உண்மை என்ன ?
இந்திய அளவில் வைரல் செய்யப்படும் சிவலிங்கம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதா எனத் தெரிந்து கொள்ள தேடிப் பார்த்தோம். ஆனால், இந்திய அளவில் உள்ள செய்திகளில் இப்புகைப்படம் எங்கும் வெளியாகவில்லை. ஆகையால், இப்புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில் பல பதிவுகள் கிடைத்தன. அதனுடன் 2016-ல் வெளியான செய்தியும் கிடைத்தது.
2016 ஜூலை 27-ம் தேதி amarujala எனும் இணையதளத்தில் வைரலாகும் சிவலிங்கத்தின் புகைப்படத்துடன் இந்தி மொழியில் செய்தி வெளியாகி இருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்க்கையில், ” உத்தரப் பிரதேசத்தில் மதியா தேவி கோவில் எனும் சரஸ்வதி கோவிலை புனரமைக்கப்பட்ட நேரத்தில் தோண்டப்பட்ட போது சிவலிங்கம் மேலே இருந்த அளவிற்கு கீழ் பகுதி வெளி வந்தது. ஆனால், அந்த கோவிலின் பூசாரி ராஜ்கிஷோர் சுக்லா தோண்டப்பட்ட போது சிவலிங்கம் கிடைக்கவில்லை, இந்த சிவலிங்கம் 250 ஆண்டுகள் பழமையானது எனக் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசத்தில் மதியா தேவி எனும் கோவிலில் எடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயோத்தி ராமர் கோவில் கட்டும் நிலத்தில் எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.
அயோத்தியில் கிடைத்த தொல் பொருட்கள் :
ராமர் கோவில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பு தரையை சமன் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு இருந்த பொழுது 10-வது நாளில் இந்து மத அடையாளங்கள் கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்தது. அவர்களின் கூற்றுப்படி, கிடைக்கப்பெற்ற செதுக்கப்பட்ட தூண்கள், கடவுள் சிலைகள் மற்றும் ஐந்து அடி சிவலிங்கம் ஆகியவை 2003-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டுபிடித்ததை போல் இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இருப்பினும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் குறித்து ஒரு நிபுணர் கருத்தைப் பெற விரும்பினால் தொல்பொருள் நிபுணர்களை அழைக்கலாம். எனினும், சமன் செய்யும் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் ஏதும் முடிவு செய்யப்படவில்லை என விஎச்பி உடைய செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு தெரிவித்து உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலத்தை சமன் செய்த இடத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், கிடைக்கப்பெற்ற பொருட்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்கிற தகவல் வெளியாகவில்லை. அவற்றை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் மூலம் ஆராய்ந்தால் மட்டுமே விவரங்களை அறிய முடியும்.
மேலும் படிக்க : பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் அனுமன் சிலை கிடைத்ததா ?
முடிவு :
நமது தேடலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியின் போது கிடைத்த 5 அடி சிவலிங்கம் என பரப்பப்படும் புகைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு கோவிலில் எடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் புகைப்படம் என அறிய முடிகிறது. தவறான புகைப்படங்களை பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.