ராம நவமி ஊர்வலத்தில் பள்ளிவாசலின் மின் வயரை துண்டிக்கும் போது மின்சாரம் தாக்கி 6 பேர் மரணமா ?

பரவிய செய்தி
ராமநவமி ஊர்வலத்தில் பள்ளிவாசல் மின் வயரை அறுத்த 6 பேர் மரணம்.
மதிப்பீடு
விளக்கம்
2023ல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டம் மற்றும் ஊர்வலத்தின் போது வன்முறை சம்பவங்கள் அரேங்கேறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராம நவமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பள்ளிவாசல் மின் வயரை துண்டிக்கும் போது மின்சாரம் தாக்கியதால் 6 பேர் உயிரிழந்ததாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் திமுகவினாரல் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
ராம நவமி ஊர்வலத்தில் பள்ளிவாசல் மின்வயரை துண்டிக்கும்போது மின்சாரம் பாய்ந்தது 6 பேர் மரணம். pic.twitter.com/z1jQJsQ08T
— Ravanasangu (@Ravanasangu3) April 7, 2023
கடவுள் பெயரில் கலவரம் பண்றவங்க முடிவுரையை அந்த கடவுளே எழுதுகிறார் போல…
பாவம் இந்த பதர்களை பெற்ற பெற்றோர்…
ஆழ்ந்த இரங்கல்கள்… https://t.co/nwtSFYayAk pic.twitter.com/9RVqEf5ZTL
— ℂℍ (@chandrahasan78) April 7, 2023
ஒரு வீடியோவில் ஊர்வலத்தில் காவி உடை அணிந்தவர்கள் தெருவில் உள்ள வயர் ஒன்றை பிடித்து இழுக்கும் போது மின்சாரம் தாக்கி கீழ விழும் காட்சிகளும், மற்றொரு வீடியோவில் மயங்கி விழுந்த சிலரின் மீது தண்ணீரை ஊற்றுவதும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
ராம நவமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா எனத் தேடுகையில், ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்ததாக 2023 மார்ச் 31ம் தேதி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் வைரல் செய்யப்படும் வீடியோ காட்சியின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
இச்சம்பவம் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் கஜேந்திர சிங் கூறுகையில், ஏழு பேர் ஒன்றாக சேர்ந்து மனித பிரமிட்டை உருவாக்கி இரும்பு வளையம் ஒன்றை அகற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மேலே சென்ற உயர் மின்னழுத்த கேபிளில் சிக்கியதால் மின்சாரம் பாய்ந்தது.
இதில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பரோடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனச் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்ரா தீப்சிங் கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து மார்ச் 30ம் தேதி வெளியான டைம்ஸ் நவ் நியூஸ் மற்றும் தி பிரிண்ட் உள்ளிட்ட செய்திகளிலும், ராம நவமி ஊர்வலத்தின் போது பள்ளி வாசலின் மின் வயரை துண்டித்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மின்சாரம் தாக்கிய போது மற்றொரு கோணத்தில் பதிவு செய்து யூடியூப் சேனல் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோவில் அங்கு பள்ளி வாசல் தென்படவில்லை, வீடுகளே உள்ளன. மின் வயரானது சாலையின் நடுவே செல்வதை பார்க்க முடிகிறது.
மேலும், சம்பவம் நிகழ்ந்த கோட்ரா தீப்சிங் கிராமம் குறித்து கூகுள் மேப் தளத்தில் தேடுகையில், அக்கிராமத்தில் கோவில்களே அதிகம் உள்ளன, பள்ளிவாசலே இல்லை என்பதைப் பார்க்க முடிந்தது.
முடிவு :
நம் தேடலில், ராம நவமி ஊர்வலத்தில் பள்ளிவாசல் மின் வயரை அறுத்த 6 பேர் மரணம் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தின் போது இரும்பு வளையத்தை அகற்ற முயன்ற போது உயர் மின்னழுத்த கம்பியால் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்து உள்ளனர், அது பள்ளி வாசலுக்கு சென்ற மின் வயர் அல்ல என்பதை அறிய முடிகிறது.