தமிழன் பிரசன்னா பொய் சொன்னதாகத் தவறான தகவலைப் பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !

பரவிய செய்தி
ரஞ்சித் ராய் செளத்ரி 2015 அக்டோபர் 27 அன்று காலமானார், பிரதமர் மோடி 2016-ல் இந்தக் குழுவை எவ்வாறு அமைத்தார் ? ரஞ்சித் ராய் தேசியக் குழு 2013-ல் UPA அரசாங்கத்தால் இந்தியாவில் மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களுக்காக உருவாக்கப்பட்டது, நீட்டிற்காக அல்ல.
மதிப்பீடு
விளக்கம்
நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் ” நீட் விலக்கு மசோதா 2.0 ஆளுநர் ஏற்பாரா, எதிர்பாரா ? ” எனும் தலைப்பில் நிகழ்ந்த விவாத நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா பேசுகையில், ” 2014-ல் மோடி அரசு அமைத்த ரஞ்சித் ராய் செளத்ரி கமிட்டியின் அறிக்கையை 96வது நாளுமன்ற நிலைக்குழுவில் வைக்கிறாங்க. அந்த நாடாளுமன்ற நிலைக்குழு விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறது. ரஞ்சித் ராய் செளத்ரி அறிக்கையில் நீட் வேண்டாம் என்கிற மாநிலத்திற்கு விலக்கு அளிக்கலாம் எனக் கூறி இருந்தார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ” எனப் பேசி இருந்தார்.
இதையடுத்து, தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா ட்விட்டரில், ” 2015-ல் ரஞ்சித் ராய் செளத்ரி காலமானார், பிரதமர் மோடி 2016-ல் எப்படி கமிட்டி அமைத்தார். நீட் தொடர்பாக ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் குழுவே அமைக்கப்படவில்லை. தமிழன் பிரசன்னா பொய் கூறுகிறார் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
முதலில் புரிந்து கொள்ள வேண்டியது, நியூஸ் 18 சேனல் விவாதத்தில் தமிழன் பிரசன்னா, 2014-ல் மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் தேசியக் குழு அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து இருப்பர். 3 முறை 2014 எனக் கூறிவிட்டு இறுதியாக வேகத்தில் பேசும் போது 2016 என (வீடியோவில் 20வது நிமிடத்தில்) எனக் கூறி விட்டார். 2015-ல் ரஞ்சித் ராய் செளத்ரி 2015-ல் உயிரிழந்துள்ளார்.
தமிழன் பிரசன்னா ரஞ்சித் ராய் செளத்ரி குழு 2014 என்பதற்கு பதிலாக 2016-ல் அமைக்கப்பட்டது என தவறுதலாகக் கூறியதால் பாஜக அரசு ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் கமிட்டி அமைக்கவே இல்லை எனக் கூறி விட முடியாது. ரஞ்சித் ராய் செளத்ரி இறப்பதற்கு முன்பாக 2014 ஜூலை மாதம் நேஷனல் கமிட்டி அமைக்கப்பட்டு 2015-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக நிதி ஆயோக் 2016 அறிக்கையில் தெளிவாக பார்க்கலாம்.
2016-ல் தாக்கல் செய்யப்பட்ட 92வது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், ” சிஎம்இடி(பொது மருத்துவ நுழைவுத் தேர்வு) வரம்பிற்கு வெளியே இருக்க விரும்பும் மாநிலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் சிஎம்இடி அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது. இருப்பினும், அத்தகைய மாநிலங்கள் பின்னர் சிஎம்இடி-ல் சேர விரும்பினால் அதற்கு ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும் ” எனத் தெளிவாய் இடம்பெற்று உள்ளது.
2019 ஆகஸ்ட் மாதம் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ” மருத்துவக் கல்வித் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்ட போது இந்த மசோதாவின் பணிகள்(The National Medical Commission Act 2019) தொடங்கப்பட்டன ” எனக் கூறியதாக pib.gov.in தளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் பாஜக அரசு மருத்துவ கல்வித் தொடர்பாக கமிட்டி அமைக்கவில்லை என தமிழக பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா கூறியது தவறான தகவல்.
2014-ல் பாஜக தலைமையிலான அரசு ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் அமைத்த நேஷனல் கமிட்டியின் அறிக்கையில் மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கூறும் மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கலாம் என இடம்பெற்றதாக தமிழன் பிரசன்னா கூறியது உண்மையே என அறிய முடிகிறது.