This article is from Jan 20, 2020

அரிதான பூச்சிக் கடித்ததால் குழந்தையின் முகம் இப்படி மாறியதா ?

பரவிய செய்தி

புகைப்படத்தில் இருக்கும் பூச்சிக் கடித்ததால் குழந்தையின் உடலில் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

உலகில் உள்ள சில வகையான பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் பொழுது ஆபத்தை விளைவிக்கும் வகையில் உடலில் மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படக்கூடும். மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிகள் குறித்த ஏராளமான தகவல்களை இணையத்தில் காண முடியும்.

குறிப்பாக, சில பூச்சிகள் கடித்தாலோ அல்லது அவற்றை நாம் தொட்டாலோ எத்தகைய கொடூரமான பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை செய்யும் விதத்தில் பல தவறான தகவல்களும் இணையத்தை ஆக்கிரமித்தே உள்ளன.

மேற்காணும் புகைப்படத்தில் இருக்கும் பூச்சிக் கடித்ததால் குழந்தையின் உடலில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதாக இரு படங்களும் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. இப்புகைப்படத்தை பகிர்ந்து, அவற்றின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் குறித்த தகவல் என்பதால் வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வேகமாக பரவக்கூடும் என ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

பூச்சியும், பாதிக்கப்பட்ட குழந்தை என இவ்விரு புகைப்படமும் நீண்ட காலமாக உலகம் முழுவதும் இணையத்தில் சுற்றி வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலத்தில் பரவிய பதிவுகளில், குழந்தையை கடித்த பூச்சியின் பெயர் Rove beetles எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

ஆனால், பரவிய படத்தில் இருக்கும் பூச்சியானது Rove beetles அல்ல, Earwigs என அழைக்கப்படும் பூச்சியாகும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை புகைப்படத்தில் காணலாம்.

Rove beetle எனும் பூச்சியின் இரத்தத்தில் நச்சுத்தன்மை இருப்பதால் கடித்த உடன் தோலில் எரிச்சல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என health.nsw.gov.au எனும் தளத்தில் பூச்சிக் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. earwigs பூச்சிக் கடித்தாலும் உடலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். ஆனால், இவ்விரு பூச்சிகளுக்கும், குழந்தையின் நிலைக்கும் தொடர்பில்லை என்பதே உண்மை.

முகத்தில் தடிப்புகளாக காட்சியளிக்கும் குழந்தையின் புகைப்படம் குறித்து தேடுகையில், குழந்தைக்கும் பூச்சியின் தாக்குதலுக்கும் தொடர்பில்லை அறிய முடிந்தது. அக்குழந்தை நிணநீர் குறைபாடுகளுடன் தொடர்புடைய லீனியர் நெவஸ் செபாசியஸ் நோய்க்குறியால் (linear nevus sebaceous syndrome) பாதிக்கப்பட்டு உள்ளது. இது பிறப்பில் இருந்தே ஏற்படக்கூடிய அரிதான நோயாகும். அந்நோய் குறித்த விவரங்கள் rarediseases.info.nih.gov என்ற தளத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க : உயிர்க்கொல்லி பூச்சியின் வைரஸால் கைகள் இவ்வாறு ஆகியதா ?

பிறப்பு சார்ந்த அரிதான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தைக் கொண்டு அரிதான பூச்சியால் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி உள்ளன. இதற்கு முன்பாகவும், அரிதான பூச்சியை தொட்டதால் கையில் துளைகள் விழுந்தது போல் பாதிக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்து குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader