This article is from Mar 05, 2020

“ரசம்” சாப்பிட்டால் கொரோனா வைரசை தடுக்க முடியுமா ?

பரவிய செய்தி

ரசம் சாப்பிட்டால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். வைரலாகும் விளம்பர பலகை.

மதிப்பீடு

விளக்கம்

சீனாவில் இருந்து பரவிய நோவல் கொரோனா வைரசை தடுக்கும் மருந்துகள் இல்லாதக் காரணத்தினால் வீட்டு மருத்துவக் குறிப்புக்கள், ஆயுர்வேத மருந்துகள் என பல மருந்து குறிப்புக்கள் இணையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் வீட்டில் காய்ச்சலுக்கான பயன்படுத்தும் உணவுகளை உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்ற அறிவுரைகள் இணையத்தில் பரவுகிறது.

இந்நிலையில்தான், கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள ரசம் சாப்பிடுங்கள், மஞ்சள் கொரோனா வைரசை தடுப்பதாக வைக்கப்பட்ட விளம்பர பதாகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தேடிய பொழுது நியூஸ் 18 செய்தியில், இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான ரசத்துக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதை அறிந்து சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் ரசத்தை அருந்துமாறு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அங்குள்ள சீனர்கள் தமிழர்களிடம் ரசம் எப்படி வைப்பது என கேட்டு வருவதாகவும் ” வெளியிட்டு உள்ளனர்.

சிங்கப்பூரில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விளம்பர பதாகையில், ” இந்தியர்களின் 5,000 வருட பாரம்பரிய மூலிகையான ரசத்தை பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக தங்களின் உணவுடன் சேர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, உங்களின் வயிற்றுக்கு மற்றும் செரிமானத்துக்கு சிறந்தது. வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உள்ளடக்கியது ” என விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த விளம்பர பலகையை வைத்தது ” Beelives Agro pvt Ltd ” எனும் நிறுவனம். இந்தியா(சென்னை), சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இயங்கும் இந்நிறுவனம் ஆர்கானிக் தயாரிப்புகளை விற்பனை செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். இந்நிறுவனம் இஞ்சி, மஞ்சள், ரசம் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகள் மட்டுமின்றி, கொரோனாவிற்கும் பாதுகாப்பு தரும் என தங்களின் விளம்பர பலகையை பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர்.

ரசம் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை அளிக்கும் என்பதை பலரும் அறிந்து இருப்போம். காய்ச்சல், சளி போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படும் சமயங்களில் வீடுகளில் ரச சாதமே முதன்மையாக இடம்பெறும். எனினும், தடுப்பு மருந்தே கண்டுபிடிக்காத கொரோனா வைரஸிற்கு ரசம் தடுப்பு மருந்தாகவோ அல்லது தடுக்கும் தன்மை கொண்டதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் பரப்பி வருகின்றனர்.

2020 ஜனவரி 29-ம் தேதி தி இந்து பிசினஸ்லைன் இணையதளத்தில் ” Refrain from travelling to China: Health Ministry ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில், ” ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தனிப்பட்ட சுகாதாரம், உடல் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் நோய் ஏற்பட்டால் விரைவாக மருத்துவரிடம் செல்லுதல் ஆகியவற்றை பரிந்துரைத்துள்ளது.

அதேபோல் பரவி வரும் போலி வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக ஃபார்வர்டுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இவற்றில் கொரோனா வைரஸை கையாள வீட்டு மருந்துகள் அறிவுறுத்தப்படுகின்றன. இதில் ரசம் குடிப்பது மற்றும் ஐஸ் கோலாஸ் தவிர்ப்பது உள்ளிட்டவை அடங்கும். சுகாதார எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், சீனாவில் மக்கள் உயிருடன் கொறித்துண்ணிகளை சாப்பிடுவதாகக் கூறும் வீடியோக்களும் உள்ளன ” எனத்  தெரிவித்ததாக வெளியாகி இருக்கிறது.

ரசம், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும் என்றாலும், கொரோனா வைரஸை தடுக்குமா அல்லது தடுப்பு மருந்தாக செயல்படுமா என்பது அறிவியல்பூர்வமாக ஆதாரமில்லாத தகவல். நம் சுகாதார நிலைமையை மேம்படுத்தி வைத்தல் அவசியம். அதற்கான வழிமுறைகளை பின்பற்றவும்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader