மது வாங்குவோருக்கு உணவு மானியத்தை நிறுத்த வேண்டும் என ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா ?

பரவிய செய்தி
மது விற்பனையை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும்..,மது வாங்குவோருக்கு அரசு தரும் “உணவுக்கான மானியங்கள்” நிறுத்தப்பட வேண்டும்..!! மது வாங்க வசதி உள்ளவர்கள் கண்டிப்பாக உணவு வாங்க முடியும்.. நாம் அவர்களுக்கு இலவசமாக உணவைக் கொடுத்தால் அவர்கள் பணத்தைக் கொடுத்து மது வாங்குகிறார்கள் -ரத்தன் டாடா
மதிப்பீடு
விளக்கம்
மது விற்பனையை ஆதார் கார்டு மூலமாக மேற்கொள்ள வேண்டும், ஏனென்றால் மது வாங்குபவர்கள் உணவு வாங்கும் வசதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு அரசின் உணவு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என ரத்தன் டாடா கூறியதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
மது வாங்க ஆதார் கட்டாயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவதுண்டு. 2020 மே மாதம் நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் வயது வாரியாக மது விற்பனை, ஆதார் கட்டாயம் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. இதேபோல், ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ மதன் திலாவர், மது விற்பனையை கட்டுப்படுத்த ஆதார் எண்ணை மது வாங்கும் போது பதிவு செய்ய வேண்டும் என 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்றத்தில் தெரிவித்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. மதுவை கட்டுப்படுத்தவே ஆதார் எண் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
மக்கள் மத்தியில் ரத்தன் டாட்டாவிற்கு என அதிகளவு ஆதரவு இருந்து வருவதால், அவர் கூறியதாக இப்பதிவை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இக்கருத்தை எங்கு, எப்போது கூறினார் என்பதற்கான ஆதாரத்தை யாரும் இணைக்கவில்லை.
ஆதார் கார்டு மூலம் மது வாங்குபவர்களை கண்டறிந்து அவர்களுக்கான உணவு மானியத்தை நிறுத்த வேண்டும் என ரத்தன் டாடா கூறியதாக எந்தவொரு செய்திகளும் வெளியாகவில்லை. ரத்தன் டாடா உடைய ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில் ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவுகள் ஏதுமில்லை.
மேலும் படிக்க : பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !
ரத்தன் டாடா கூறியதாக கருத்துக்களை வைரல் செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக, ரத்தன் டாடா வைத்து பலமுறை தவறான தகவல்கள் பரப்பப்பட்டு இருக்கிறது. நான் கூறாதக் கருத்தை பரப்புவதாக அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க : ரத்தன் டாடாவை வைத்து பரப்பப்படும் வதந்திகளின் தொகுப்பு !
முடிவு :
நம் தேடலில், மது விற்பனையை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும், மது வாங்குவோருக்கு அரசு தரும் உணவுக்கான மானியங்கள நிறுத்தப்பட வேண்டும் என ரத்தன் டாடா கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. ரத்தன் டாடா அப்படியொரு கருத்தை கூறியதாக எந்தவொரு பதிவுகளும் இல்லை என அறிய முடிகிறது.