This article is from Jul 13, 2021

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என அறிவித்ததா ?

பரவிய செய்தி

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவிப்பு !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

எனினும், தற்போதுவரை குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்கிற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் ஓர் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

ஜூலை 9-ம் தேதி வெளியான நியூஸ் 18 செய்தியில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ” தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் எனத் தெரிவித்ததாக ” வெளியாகி இருக்கிறது.

இதைத் தவிர்த்து, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சாத்தியமில்லை என்றோ அல்லது திட்டத்தை செயல்படுத்த போவதில்லை என்றோ தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரப்பில் அல்லது செய்திகளில் வெளியாகவில்லை.

News Archive link 

இதை யார் வெளியிட்டது எனத் தேடுகையில், செய்தி புனல் எனும் இணைய செய்தி தளத்தில் ஜூலை 12-ம் தேதி வெளியான செய்தியில் அப்படியொரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியின் தலைப்பே தற்போது பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், பின்னர் செய்தி புனல் இணையதளமும், ” குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவிப்பு ! ” எனும் தலைப்பை ” குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை ? ” என மாற்றி இருக்கிறது. தலைப்பை மாற்றினாலும், செய்தியின் லிங்கில், ” ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்தது ” என ஆங்கிலத்தில் இருப்பதை காணலாம்.

மேலும், செய்தியின் இறுதியில், ” ஆகையால் அத்திட்டத்தை தற்போது தொடங்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது ” என்ற வரியையும் நீக்கி கால தாமதம் ஏற்படுவதாக என்பதோடு முடித்து இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவிப்பு என பரவும் தகவல் வதந்தியே. அதிகாரப்பூர்வமாக அப்படி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

செய்தி புனல் எனும் இணையதளமே குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவிப்பு எனும் தலைப்பில் செய்தியை வெளியிட்டு இருக்கிறது. பின்னர் குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை ? என தலைப்பையும், செய்தியையும் மாற்றி இருக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader