முதல்வர் ஸ்டாலின் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா ?

பரவிய செய்தி

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கல். ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்கல் – தமிழக அரசு

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக சன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

சன் நியூஸ் பெயரில் உள்ள நியூஸ் கார்டை பகிர்ந்து திமுக ஆதரவாளர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் வெல்லம் உருகி மாவு போல் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைக் குறிப்பிட்டு சிலர் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ? 

தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வேட்டி, சேலை, அரிசியுடன் பொங்கல் தொகுப்பு கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பு வெளியாகியது.

டிசம்பர் 22ம் தேதி வெளியான தமிழக அரசு செய்தி வெளியீட்டில், ” 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள் ” எனக் கூறப்பட்டு உள்ளது.

அரசு வெளியிட்டில் பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது குறித்து குறிப்பிடவில்லை, சர்க்கரை வழங்கப்படுவதாகவே இடம்பெற்று உள்ளது.

தமிழக ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் சன் நியூஸ் தமிழ் சேனலிலும் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.

இதற்கு முன்பாக, கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வழங்க உள்ளதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் நியூஸ் கார்டு ஒன்றை அதிமுக ஆதரவளார்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

Facebook link 

மேலும் படிக்க : ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவா ?

அப்போதே, பரவக்கூடிய நியூஸ் கார்டு போலியானது என்றும், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கருப்பட்டி வழங்குவது தொடர்பான பரிந்துரையை மட்டுமே கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு அளித்ததாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

கடந்த 2020-ல் எடப்பாடி பழனிசாமி படத்துடன் வைரலான அதே நியூஸ் கார்டில் ஸ்டாலின் புகைப்படத்தையும், சன் நியூஸ் சேனலின் லோகோவையும் எடிட் செய்து அதே வதந்தியை மீண்டும் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதாக பரப்பப்படும் செய்தி போலியானது. அப்படி எந்த உத்தரவும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader