ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவா ?

பரவிய செய்தி
ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்கல் – தமிழக அரசு
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை வழங்க உள்ளதாக முதல்வர் பழனிச்சாமி உடைய புகைப்படத்துடன் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றும் சொல்கிறேன் ஒரு தமிழ் விவசாயிக்கு இருக்கும் இயற்கையான தமிழர் கலாச்சார உணர்வு ஓங்கோல் பூர்வகுடிகளுக்கு வராது நாடோடிகள் always நாடோடிகளே..
( பிகு:Prakasam District ongole karunanidhi nu youtube ல தேடி பாருங்க ) pic.twitter.com/E7HQcPjqDJ— Madan Ravichandran (@MadanRavichand4) March 17, 2020
வின் நியூஸ் சேனலின் அரசியல் பிரிவு ஆசிரியர் மதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருப்பட்டி குறித்த பிரேக்கிங் நியூஸ் கார்டை பகிர்ந்தும் உள்ளார். மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தாலும்கூட செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள தீர்மானித்தோம்.
சமீபத்தில் தமிழக ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது குறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியாகியதாக எனத் தேடினோம். இன்னும் அது தொடர்பான அறிவுப்புகள் ஏதும் வெளியாகவில்லை. மேலும், தமிழக செய்திகளில் ஏதேனும் விவரங்கள் வெளியாகியதாக எனத் தேடிய பொழுது, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த தகவல் மட்டும் நமக்கு கிடைத்தன.
மார்ச் 16-ம் தேதி மாலைமலர் இணையதளத்தில் வெளியான செய்தியில், ” ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் ” கூறியுள்ளதாக வெளியாகி இருக்கிறது.
ராமநாதபுரத்தின் பதநீர் மகாலில் நடைபெற்ற பனை மாநாட்டிற்கு தமிழக சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பனை மரம், பனை வியாபாரம், பனை பொருட்கள் குறித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன் ரேசன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் பாண்டியராஜன் ரேசன் கடைகளில் கருப்பட்டி வழங்கலாம் என்ற முடிவை மாநாட்டில் கூறியதோடு கூட்டுறவுத்துறைக்கு பரிந்துரையும் செய்வதாக தெரிவித்தார். இது பாராட்டப்பட வேண்டிய செயலாகும். எனினும், தற்போது பரிந்துரை மட்டுமே செய்ய உள்ள நிலையில் ரேசன் கடைகளில் கருப்பட்டி வழங்க உள்ளதாக தமிழக முதல்வரின் புகைப்படத்துடன் செய்தியை பரப்பி வருகின்றனர்.
ரேசன் கடைகளில் கருப்பட்டி வழங்கும் முடிவை தமிழக அரசு செயல்படுத்தும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நிச்சயம் பாராட்டுகளை பெறும். இதனால் பனை சார்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.