This article is from Dec 19, 2019

செவ்வாழை என மஞ்சள் வாழைப்பழத்தில் ரசாயனம் பூசி கலப்படமா ?

பரவிய செய்தி

மஞ்சள் வாழைப்பழத்தில் ரசாயனத்தை கலந்து செவ்வாழை என விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அனைவரையும் ஏமாற்றி வருகிறார்கள். உணவு பண்டத்தில் கலப்படம்.

Facebook link  | archived link 

மதிப்பீடு

விளக்கம்

சாதாரண வாழைப்பழத்தில் சிவப்பு நிறத்தை பூசி செவ்வாழை என விற்பனை செய்து வருவதாக ஒருவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி செவ்வாழையில் கலப்படமா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

பாத்திரங்களை கழுவப் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ப்ரஷ் கொண்டு செந்நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தை கழுவும் போது வாழைப்பழத்தில் உள்ளிருக்கும் மஞ்சள் நிறம் தென்படுகிறது. இதனால், சாதாரண வாழைப்பழத்தில் சிவப்பாக ரசாயனங்கள் சேர்த்து கலப்படம் செய்வதாக கூறுகின்றனர். ஆனால், இந்த வீடியோவை பார்த்தவர்கள் சிவப்பு சாயம் பூசப்பட்டு இருந்தால் தண்ணீரின் நிறம் ஏன் மாறவில்லை என்ற கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், செவ்வாழையில் கலப்படம் என வைரலாகும் வீடியோவுக்கு எதிராக விவசாயிகள் தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. கலப்பட செவ்வாழையில் சிவப்பு நிறம் சேர்க்கப்ட்டுள்ளதாக கூறி வைரலாக வீடியோ முற்றிலும் தவறான தகவல். அது மக்களை அச்சமடையச் செய்த வதந்தி என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

செவ்வாழையில் வெளி நிறத்தில் சிவப்பு நிறம் காணப்பட்டாலும், மேல் தோல் பகுதியை சோப்பு இல்லாமல் விரலால் சுரண்டினாலும் மஞ்சளை நிறம் வெளிவரச் செய்யும். பொதுவாக கடையில் விற்பனை செய்யப்படும் செவ்வாழை பழத்தில் ஆங்காங்கே மஞ்சளை நிறம் தென்படுவதை கண்டு இருக்கிறோம்.

இது குறித்து Learn Agriculture team அளித்த தகவல் , ” செவ்வாழையில் இருக்கும் சிவப்பு நிறத்திற்கு காரணம் ஆந்தோசயனின் என்னும் நிறமி ஆகும். ஆந்தோசயனின் secondary metabolite வகையை சார்ந்தது. மேற்கண்ட வைரல் வீடியோவில் சோப்பை கொண்டு தேய்பதால் சோப்பில் உள்ள கெமிக்கல்களுடன் வேதி மாற்றம் நடந்து வாழைப் பழத்தின் மீது உள்ள ஆந்தோசயனின் நிறம் இழக்கும். பொதுவாகவே ஆந்தோசயனின் செவ்வாழை பழத்தின் மேல் மெல்லியதாக தான் படர்ந்திருக்கும். வீடியோவில் காண்பித்தது போல சுரண்டும் பொழுது அந்த ஆந்தோசயனின் படலமானது எளிதாக தோலில் இருந்து அகன்று விடும்.

தகவல் : தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி.

ஜீ.கே.தினேஷ், மூதறிவியல் வேளாண்மை பட்டதாரி  ”

ஆந்தோசயனின் (Anthocyanin) என்ற நிறமியின் காரணமாக செவ்வாழையில் சிவப்பு நிறம் காணப்படுகிறது. ஒரு செவ்வாழை மரத்தின் மூட்டில் இருந்து கன்றை அகற்றாமல் அப்படியே அருகே வளர்ந்து வந்தால் இரண்டு முறைக்கு மேல் முளைக்கும் கன்றுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அப்பொழுது ஆந்தோசயனின் தன்மை குறைவதால் அந்த வாழை மரத்தில் இருந்து கிடைக்கூடிய காயின் உள்ளே பச்சை நிறத்திலும், பழம் மஞ்சள் நிறத்திலும் மாறும். ஆனால், சுவை மற்றும் குணத்தில் செவ்வாழையை போன்றே இருக்கும்.

Facebook link | archived link 

செவ்வாழை மரம் வளர்க்கப்படும் பகுதியில் மரத்தின் அருகே இருக்கும் கன்றுகளையும் மற்றும் மரத்தில் காய்த்து இருக்கும் செவ்வாழையை காண்பித்தும் விளக்கி கூறப்பட்ட வீடியோ முகநூல் பக்கத்தில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோவின் இறுதியில், மரத்தில் இருக்கும் செவ்வாழை பழத்தில் தேய்க்கும் பொழுது பச்சை நிறம் தென்படுவதை காண்பித்து இருப்பார்கள். வளரும் தருணத்தில் வாழைப்பழத்தின் தோல் பகுதி பச்சை நிறத்திலும், வளர்ந்து பிறகு மஞ்சள் நிறத்திலும் மாறும் .

கடைகளில் விற்கப்படும் செவ்வாழைகளில் மஞ்சள் நிறம் தென்படுவதை நீங்களே பார்த்து வாங்கலாம். நீங்கள் வாங்கும் வாழைப்பழம் செவ்வாழையா என சந்தேகம் இருந்தால், அதன் சுவையில் இருந்து அதனை அறியலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய செவ்வாழை பழத்தை பற்றி முழுமையாக அறியாத யாரோ ஒருவர் வெளியிட்ட வீடியோ செவ்வாழை விவசாயிகளை கலக்கமடையச் செய்து இருக்கிறது.

ஆகையால், செவ்வாழை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. தவறான தகவல்களை பரப்பாமல், சரியான தகவல்களை பகிரவும்.

Please complete the required fields.




Back to top button
loader