தட்டுப்பாட்டை ஏற்படுத்த ரெம்டெசிவிர் மருந்தை பஞ்சாப் கால்வாயில் கொட்டினார்களா ?

பரவிய செய்தி

இந்திய நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பெருமளவிலான Remdisivir மருந்தை பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டி இருக்கிறார்கள். இந்தியனே விழிப்பாய் இரு .

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதால் அதற்கான தேவை, பற்றாக்குறை, கள்ளச் சந்தை என பல்வேறு பிரச்சனைகள் ரெம்டெசிவிர் மருந்தை சுற்றி இருந்து வருகிறது.

இந்நிலையில், வேண்டுமென்றே இந்தியாவில் ரெம்டெசிவிர் தட்டுப்பாட்டை ஏற்படுத்த பஞ்சாபில் உள்ள கால்வாயில் பெருமளவில் மருந்துகளை கொட்டியதாக 1.43 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Twitter link | Archive link 

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்து இதே வீடியோ பஞ்சாப் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் மே 8-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

உண்மை என்ன ?

வைரலாகும் வீடியோவில், கால்வாய் நீரில் ரெம்டெசிவிர் மருந்தின் பாக்கெட்கள் பல அடித்து செல்லப்படுகிறது. அதை வீடியோ எடுக்கும் நபர் மருந்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து காண்பிக்கிறார். அந்த பாக்கெட்களில் ” COVIFOR ” என எழுதி இருப்பதை கவனிக்க முடிந்தது.

இது குறித்து தேடுகையில் மே 6ம் தேதி tribuneindia இணையதளத்தில், ” பஞ்சாப் சாலம்பூர் கிராமத்தில் அருகே உள்ள கால்வாயில் ஏராளமான குப்பிகள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் குழு சுகாதார அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை பார்வையிட்ட போது ரெம்டெசிவிர் மற்றும் செஃபோபெராசோன் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனர். பால்சான்டா கிராமத்தில் மேலும் குப்பிகளை எடுத்துள்ளார்.

மொத்தம் 621 ரெம்டெசிவிர் மற்றும் 1,456 செஃபோபெராசோன் குப்பிகளை இரண்டு இடங்களில் இருந்து எடுத்து உள்ளனர். பெயரில்லாத 849 குப்பிகளும் எடுக்கப்பட்டுள்ளன.  ஆனால், மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரியான தேஜிந்தர் சிங் கூறுகையில், மருந்துகள் போலியானவை. குப்பிகளில் உள்ள லேபிள்கள் அதே நிறுவனத்தின் அசல் குப்பிகளுடன் பொருந்தவில்லை ” என வெளியாகி இருக்கிறது.

Archive link 

இதற்கு முன்பாக, ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி டிசிபி மோனிகா பரத்வாஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” உண்மையான ரெம்டெசிவிர் மருந்திருக்கும், போலியான மருந்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை தெளிவுப்படுத்தி ” பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட் பதிவில் இடம்பெற்ற போலியான மருந்தின் அட்டையே பஞ்சாப் கால்வாய் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

ஹெடெரோ நிறுவனத்தின் பெயரில் போலியான ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து காவல்துறை தரப்பில் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஹெடெரோ நிறுவனம் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி ரெம்டெசிவிர்  மருந்துகளையே கால்வாயில் வீசி இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : “கோவிப்ரி” பெயரில் போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. எச்சரிக்கை !

இதற்கு முன்பாக, கோவிப்ரி எனும் பெயரில் போலியான ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிக்கப்படுவது குறித்தும், போலி மருந்துகளை தயாரிப்பவர்களை போலீசார் கைது செய்த சம்பவங்கள் குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்திற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்த பஞ்சாப் கால்வாயில் ரெம்டெசிவிர் மருந்துகளை கொட்டியதாக பரப்பும் வீடியோ உடன் கூடிய தகவல் தவறானது. வீடியோவில் காணப்படுவது போலியான ரெம்டெசிவிர் மருந்துகள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button