This article is from May 15, 2021

பிரதான் மந்திரி ஜான் அவுஷதி கேந்திரா மருந்தகங்களில் ரெம்டெசிவிர் ரூ.899க்கு கிடைப்பதாக வதந்தி !

பரவிய செய்தி

தயவு செய்து பகிரவும்.. ரெம்டெசிவிர் மருந்துகள் ரூ.4000/- முதல் 50,000/- வாங்குவதற்கு பதிலாக ரூ.899/-க்கு பெறலாம். அதை பிரதான் மந்திரி ஜான் அவுஷதி கேந்திரா மருந்தகங்களில் இருந்து நேரடியாக பெறலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் பிரதான் மந்திரி ஜான் அவுஷதி கேந்திரா உள்ளது.

தேவையான ஆவணங்கள் :
1) நோயாளியின் ஆதார் அட்டை
2) கோவிட் பாசிட்டிவ் அறிக்கை
3) மருத்துவர்களின் அசல் பரிந்துரை
4) மருந்து வாங்கும் நபரின் ஆதார் அட்டை

மற்றவர்களுக்கு உதவ உங்கள் எல்லா குழுக்களிலும் பகிரவும். http://janaushadhi.gov.in/StoreDetails.aspx

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ரெம்டெசிவிர் தேவை இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் அம்மருந்திற்காக மக்கள் அலையும் காட்சிகள் தமிழகம் முழுவதும் காண முடிகிறது. ரெம்டெசிவிர் தேவை அதிகரித்ததால் கள்ள சந்தையில் அதிக விலைக் கொடுத்து வாங்கும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி ஜான் அவுஷதி கேந்திரா மருந்தகங்களில் ரூ.899க்கு ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என வாட்ஸ் அப் பார்வர்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜான் அவுஷதி கேந்திரா மருந்தகங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. இங்கு ஜெனிரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விலை குறைவாக இருந்தாலும் பிராண்டட் மருந்துகளின் தரம் மற்றும் செயல்திறனுக்கு சமமானவை. இந்த திட்டம் முதன்முதலில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, எனினும் 2015ம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த கேந்திரா மருந்தகங்களில் கிடைக்கும் அனைத்து ஜெனிரிக் மருந்துகளின் பட்டியலை pmjay.gov.in இணையதளத்தில் காணலாம். அந்த பட்டியலில் ரெம்டெசிவிர் மருந்து இடம்பெறவில்லை. அங்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்தம் 7 நிறுவனங்கள் உள்ளன. மார்ச் மாதத்தில், உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜைடஸ் காடிலா எனும் நிறுவனம் 100 மி.கி குப்பியின் விலையை 2,800ல் இருந்து ரூ.899 ஆக குறைப்பதாக அறிவித்தது. ஆகையால், ரெம்டெசிவிர் மருந்து ஒரு நிறுவனத்திடம் இருந்தே ரூ.899க்கு கிடைக்கிறது.

ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் விலை லைவ்மின்ட் செய்தியில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் இறுதியில், Dr.Reddys நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தின் விலையை பாதியாக குறைப்பதாக அறிவித்தது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஏப்ரல் 13-ம் தேதி நிதி ஆயோக் உடைய உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், ” இது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய மற்றும் ஆக்சிஜனில் இருக்கும் நபர்களுக்கு தேவைப்படுகிறது. மருந்து கடைகளில் இருந்து ரெம்டெசிவிர் வாங்கக்கூடாது ” எனக் கூறியதாக ஏஎன்ஐ செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், பிரதான் மந்திரி ஜான் அவுஷதி கேந்திரா மருந்தகங்களில் ரெம்டெசிவிர் மருந்துகள் ரூ.899/-க்கு கிடைப்பதாக பரவும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் தவறானது. அங்கு ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைப்பதில்லை. ஒரு நிறுவனம் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகளை ரூ.899/-க்கு வழங்கி வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader