என்னது இவர் திருவள்ளுவரா.. இந்து மக்கள் கட்சி பகிர்ந்த தவறான தகவல் !

பரவிய செய்தி

கல்வி அமைச்சகத்தின் சார்பில் திருவள்ளுவர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்திய தேசத்தின் 73-ம் ஆண்டு குடியரசு தின விழா டெல்லியில் நடைபெற்று முடிந்தது. குடியரசு தின விழாவில் மாநிலங்கள் மற்றும் அரசு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.

இத்தகைய அணிவகுப்பில், இந்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியில் திருவள்ளுவரை இடம்பெறச் செய்துள்ளதாக, காவி உடை, ருத்ராட்சம் அணிந்து முனிவர் தோற்றத்தில் அமர்ந்து இருக்கும் உருவம் இடம்பெற்ற அலங்கார ஊர்தி புகைப்படம் ஒன்று இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

இந்திய குடியரசுத் தலைவரின் யூடியூப் சேனலில் வெளியான 2022 குடியரசு தின விழா நிகழ்ச்சியின் வீடியோவில், 1:23:35-வது நேரத்தில் கல்வி அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி அணிவகுத்து செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. கல்வி அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி ” தேசியக் கல்விக் கொள்கையை ” மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

அலங்கார ஊர்தி அணிவகுப்பு குறித்து கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தன் ட்விட்டர் பக்கத்தில், ” வேதங்கள் முதல் மெட்டாவேர்ஸ் வரை இந்தியக் கல்வி முறை கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கிறது மற்றும் தொழில்நுட்பத்தை தழுவி புதிய எதிர்காலத்தை உருவாக்குகிறது ” எனப் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவை கல்வி அமைச்சகம் பகிர்ந்தும் இருக்கிறது.

Twitter link | Archive link 

கல்வி அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி குறித்து வெளியிடப்பட்ட செய்திகளிலும், தேசியக் கல்விக் கொள்கையைக் காட்சிப்படுத்தும் வகையில் ” வேதம் முதல் மெட்டாவேர்ஸ் வரை ” என்பது இடம்பெற்றதாகவே வெளியாகி இருக்கிறது. எங்கும் திருவள்ளுவரின் பெயர் இடம்பெறவே இல்லை.

பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினர் திருவள்ளுவர் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தையே பயன்படுத்தி வருகிறார்கள். அதற்காக, அலங்கார ஊர்தியில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்த உருவம் திருவள்ளுவர் ஆகி விட முடியாது. அது வேத கால கல்விமுறையை குறிக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், கல்வி அமைச்சகத்தின் சார்பில் அலங்கார ஊர்தியில் திருவள்ளுவர் இடம்பெற்றதாக இந்து மக்கள் கட்சி பகிர்ந்து புகைப்படம் தவறானது. கல்வி அமைச்சகத்தின் சார்பில் தேசியக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வேதம் முதல் மெட்டாவேர்ஸ் வரை என அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button