This article is from Nov 01, 2019

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்கும் நிலைக்கு சென்றதா ?| மறுக்கும் ரிசர்வ் வங்கி.

பரவிய செய்தி

காலியாகிறது இந்தியாவின் கஜானா..தங்கத்தையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து மந்தநிலை நிலவி வருவதாக பேசி வருகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்துள்ளதாக செய்திகள் ஊடகங்கள் , சமூக வலைதளங்களில் தீயாய் பரவத் துவங்கியது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Newsu tamil post facebook link | archived link  

” காலியாகிறது இந்தியாவின் கஜானா.. தங்கத்தையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி ” என அக்டோபர் 27-ம் தேதி newsu என்ற ஆன்லைன் செய்தி தளம் முகநூலில் நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டது. இந்த பதிவு ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகி இருக்கிறது.

இதையடுத்து, பலரும் முகநூலில் ” காலியாகிறது இந்தியாவின் கஜானா ” என பகிர்ந்தும், பதிவிட்டும் வரத் தொடங்கினர். இதற்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் உபரி நிதியாக இருக்கும் 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது ஊடகங்களில் விவாதமாகவே மாறியது. தற்பொழுது தங்கத்தை விற்கும் நிலைக்கு ரிசர்வ் வங்கி சென்றதாக வைரலாகும் செய்தி குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?

சில பொருளாதாரம் சார்ந்த ஊடகச் செய்திகள் மத்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்வதாக செய்திகளை வெளியிட்டு இருந்தனர். குறிப்பாக, எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான செய்தியின் படத்தை இந்திய கம்யூனிட்ஸ் கட்சியின்(மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராமன் எச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 24-ம் தேதி வெளியிட்டு இருக்கிறார்.


sitaram yechury tweet archived link  

அதில், 2019 ஜூலை மாதம் வரையில் ரிசர்வ் வங்கி 5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை வாங்கி, அதில் இருந்து 1.15 பில்லியன் டாலர் அளவிலான தங்கத்தை விற்பனை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதை அடிப்படையாக வைத்து ஊடகங்களில் வேகமாக பரவத் துவங்கி இருக்கிறது.

ஆனால், ” கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்வதாக ” வெளியான தகவலை மத்திய ரிசர்வ் வங்கி மறுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அக்டோபர் 26-ம் தேதி ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்ட பக்கத்தில் இரண்டு ட்வீட்கள் வெளியாகி இருந்தன.


RBI Tweet Archived link

முதல் ட்வீட் பதிவில், ” சில குறிப்பிட்ட ஊடகங்களில் இந்திய ரிசர்வ் வங்கியானது தங்கத்தை விற்பனை செய்ததாகவும்/தங்க வணிகத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது. ரிசர்வ் வங்கி எந்தவொரு தங்க விற்பனை அல்லது பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

RBI 2 tweet archived link  

” வாராந்திர புள்ளிவிவர துணை அறிக்கையில் தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கமானது, மாதந்தோறும் செய்து வந்த கையிருப்பு மறுமதிப்பீடு தற்பொழுது வாரந்தோறும் செய்யப்படுவதால், சர்வதேச தங்க விலை மற்றும் பரிமாற்ற விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக காணப்படுகிறது ” என இரண்டாவது ட்வீட் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Economic times news link  

ரிசர்வ் வங்கியின் இப்பதிவை எகானாமிக் டைம்ஸ் தன்னுடைய கட்டுரையில் 27-ம் தேதி அப்டேட் செய்து இருக்கிறது. அதில், ட்வீட் பதிவுகளும் இணைக்கப்பட்டு உள்ளன. பிற ஊடக செய்திகளிலும் ” கையிருப்பு தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்வதாக ” வெளியான தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்ததாக செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.

அக்டோபர் 26-ம் தேதியே தங்கம் விற்பனை குறித்த தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து விட்டது. எனினும், இதையறியாமல் சமூக ஊடகங்கள் , பிற செய்திகளில் தவறாக செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

முடிவு : 

நம்முடைய ஆய்வில், ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்து வருவதாக வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து உள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது.

எகானாமிக் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகச் செய்தியில் வெளியான தகவலால் சமூக வலைதளங்களில் அந்த செய்தி வைரலாகி இருக்கிறது. அக்டோபர் 26-ம் தேதி ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து விட்டது. ஆனால், அக்டோபர் 27-ம் தேதி சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கிறது.

செய்தி தளங்களே வெளியிட்ட தகவலாக இருந்தாலும் அதை ஒன்றுக்கு , இரண்டு முறை அறிந்து பகிரச் செய்யுங்கள். தவறான தகவலை பரப்பி விடாமல் இருக்க முயற்சியுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader