2017ல் எஸ்.ஐ தேர்ச்சி அடைந்த பெண்ணின் படத்தை வைத்து ஐ.ஏ.எஸ் தேர்ச்சி அடைந்ததாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
IAS தேர்வில் மூன்றாவது இடம். ஓலை குடிசையில் பிறந்து கூலி தொழிலாளியின் மகளாய் வளர்ந்து IAS தேர்வில் மூன்றாம் இடம் பிடித்த ரேவதி வாழ்த்துக்கள் சகோதரி.
மதிப்பீடு
விளக்கம்
ஓலை குடிசையில் பிறந்து வளர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ரேவதி என்பவர் இந்திய ஆட்சிப் பணியாளர் (IAS) தேர்வில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அப்புகைப்படத்தில் குடிசை வீடு ஒன்றும், இளம் பெண் ஒருவருக்கு இருவர் இனிப்பு ஊட்டும் படமும் உள்ளது.
“”IAS தேர்வில் மூன்றாவது இடம் “”
ஓலை குடிசையில் பிறந்து கூலி தொழிலாளியின் மகளாய் வளர்ந்து IAS தேர்வில் மூன்றாம் இடம் பிடித்த ரேவதி #வாழ்த்துக்கள் சகோதரி. pic.twitter.com/6D4NOKq4Up— VELLORE KAMAL (@kamalpmk) March 20, 2023
உண்மை என்ன ?
கூலித் தொழிலாளியின் மகள் இந்திய ஆட்சியர் பணியாளர் தேர்வில் மூன்றாம் இடம் எனப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம்.
அந்த புகைப்படம் 2017ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை காண முடிந்தது. அது பரவுவதற்கு முன்னர் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை ஆராய்ந்தோம்.
Karnataka's Revathi got selected for IAS. Her parents are daily wagers. Determination to rise like the Lotus. pic.twitter.com/5Wv1FSnRzL
— Sonal Mansingh (@sonal_mansingh) July 7, 2017
2016ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு பட்டியலில், ரேவதி எனும் பெயர் இடம் பெறவில்லை. மேலும் 3வது இடத்தில் கோபால கிருஷ்ண ரோணங்கி என்பவரது பெயர் இடம்பெற்றுள்ளதைக் காண முடிந்தது.
வைரல் செய்யப்படும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Telugu.ap2tg எனும் இணையதளத்தில் 2017 மார்ச் 27ம் தேதி வெளியான செய்தியில், ரேவதி காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வில் தேர்ச்சி அடைந்ததாக இப்புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு தேடுகையில், சிவாஜி காவல் பயிற்சி நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் பரவக் கூடிய புகைப்படத்துடன் வெளியான செய்தி ஒன்றைக் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவிட்டுள்ளனர்.
தெலுங்கிலுள்ள அச்செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பார்க்கையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரேவதி எனும் பெண்ணின் பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளர்களாகப் பணி செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் தனது கடின உழைப்பினால் அரசுப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ரேவதிக்கு அப்பயிற்சி மையம் நடத்திய பாராட்டு விழா புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ரேவதி என்பவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் 3ம் இடம் பிடித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது. அப்புகைப்படம் 2017ல் அவர் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சி அடைந்த போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.