This article is from Feb 15, 2021

யாகத்தில் நெய், அரிசி போடுவதால் புரபலீன் ஆக்ஸைடு உருவாகி மழை வருமா ?

பரவிய செய்தி

அரிசியையும் பசு நெய்யையும் கலந்து எரித்தால் புரபலின் ஆக்ஸைடு என்ற வாயு உருவாகிறதாம். இந்த வாயு இருந்தால் தான் மழை பெய்யும். செயற்கையாக மழை பெய்வதற்கு விமானம் மூலம் இந்த புரபலின் ஆக்ஸைடை வானில் தூவுகிறார்களாம். நமது வீடுகளில் நடக்கும் யாக குண்டங்களில் நெய் மற்றும் அரிசியைப் போட்டு எரிப்பதை பார்த்திருப்பீர்கள். இதுவும் முன்னோர்கள் மழை பெய்வதற்காக கண்டுபிடித்த உபாயம் என்கிறார்கள்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

யாகத்தில் பசு நெய் மற்றும் அரிசியை போட்டால் புரபலீன் ஆக்ஸைடு உருவாகும், அது செயற்கை மழையை உருவாக்கப் பயன்படுகிறது எனக் கூறப்படும் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சுற்றி வந்துள்ளது. தற்போது, யாகத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள் என மீண்டும் பகிரப்பட்டு வருகிறார்கள்.

ஏதோ புத்தகத்தில் அச்சிட்டது போல் தெரிகிறது. எனினும், இப்பதிவை யார் வெளியிட்டது எனத் தெரியவில்லை. இதை யாரோ கூறியது போல் எழுதி இருக்கிறார்கள்.

உண்மை என்ன ? 

சிறிய அளவில் கார்பன், ஹைட்ரஜன் கொண்ட அரிசியோடு புரதம், கால்சியம், கொழுப்பு, நைட்ரஜன், பாஸ்பரஸ் உள்ளிட்டவை கொண்ட நெய்யை நெருப்பில் வெப்பமூட்டினால் புரபலீன் ஆக்ஸைடு வரும் என்பது அடிப்படை ஆதாரமற்ற தகவல். அதேபோல், புரபலீன் ஆக்ஸைடு மூலம் செயற்கை மழையை உருவாக்குவதாக கூறுவதும் தவறான தகவலாகும்.

Cloud Seeding எனப்படும் மேக விதைத்தல் செயல்பாட்டில், அங்குள்ள மேகங்கள் குளிர்ந்து நீர்த்திவலைகளாக மாறக்கூடிய வேகத்தினை துரிதப்படுத்தி மழையாகப் பொழிய வைக்க சில்வர் அயோடைடு(Silver iodide) எனும் கனிம சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைடு(Dry Ice) உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலும் கூட செயற்கை மழை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன, அது தொடர்பான செய்திகளும் வெளியாகின. எனினும், புரபலின் ஆக்ஸைடைப் பயன்படுத்துவதாக எங்கும் குறிப்பிடுவதில்லை. சில்வர் அயோடைடு உள்ளிட்டவையை பயன்படுத்துவதாகவே தகவல்கள் உள்ளன.

புரபலின் ஆக்ஸைடு(Propylene oxide) தொடர்பாக pubchem.ncbi.nlm.nih.gov இணையதளத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ” புரபலின் ஆக்ஸைடு என்பது செயற்கையான, அதிகம் எரியக்கூடிய மற்றும் நிறமற்ற திரவமாகும். இது தண்ணீரில் கரையக்கூடியது. பாலியிதர்ஸ் மற்றும் புரோப்பலீன் கிளைக்கோல் உற்பத்தியில் புரபலின் ஆக்ஸைடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கண், சருமம் மற்றும் சுவாசக்குழாயை எரிச்சலடையச் செய்யும் ” என்றுக் கூறி இருக்கிறார்கள்.

மேலும் படிக்க : பசுவிற்கு விஷம் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா ?

இவ்வாறான புரளி தகவல்கள் சாமானிய மக்களை எளிதாக நம்ப வைத்து விடுகிறது. இதுமட்டுமின்றி, பசுவை வைத்தும், பசு நெய் வைத்தும் பல்வேறு புரளிகள் பரப்பப்பட்டன. குறிப்பாக, 10 கிராம் பசு நெய்யை யாகத்தில் ஊற்றி 1 டன் அளவிற்கு ஆக்சிஜன் உருவாக்குவதாகவும், பசுக்கு விஷம் அளிக்கப்பட்டால் அதற்கு ஒன்றும் ஆகாது என பல வதந்திகளை பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பசு மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும் – உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு !

2019-ல் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பசுவால் மட்டுமே ஆக்சிஜனை உள்ளிழுக்கவும், வெளியேற்றவும் முடியும் எனப் பேசியது இந்திய அளவில் வைரலாகியது. இதேக் கருத்தை 2017-ல் ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பேசியது கிண்டலுக்குள்ளானது.

முடிவு :

நம் தேடலில், யாக குண்டங்களில் நெய் மற்றும் அரிசியை போடுவதால் புரபலின் ஆக்ஸைடு என்ற வாயு உருவாகிறதாம், புரபலின் ஆக்ஸைடு கொண்டு செயற்கை மழை உருவாக்கப்படுவதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader