2017-18-ல் திமுக கட்சியின் வருமானம் 845% அதிகரிப்பு – ADR தகவல்.

பரவிய செய்தி
கடந்த ஓராண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரிப்பு.
மதிப்பீடு
சுருக்கம்
ADR வெளியிட்ட இந்திய மாநிலக் கட்சிகளின் 2017-2018 நிதியாண்டின் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய தகவலில், இந்தியாவில் பணக்கார கட்சிகளின் பட்டியலில் தமிழகத்தின் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
விளக்கம்
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வருமானம் மற்றும் செலவு பற்றியும், பணக்காரக் கட்சிகள் உள்ளிட்ட விவரங்களையும் ” Associations of Democratic Reforms ” (ADR) என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது.
மார்ச் 7, 2019-ல் ADR ” Analysis of Income & Expenditure of Regional parties for 2017-2018 ” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் இந்தியாவில் உள்ள 37 மாநிலக் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ” IT Returns “-ஐ அடிப்படையாக் வைத்து ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.
2017-2018 நிதியாண்டில் இந்தியாவின் பிரதான மாநிலக் கட்சிகளான 37 கட்சிகளின் மொத்த வருமானம் 237.27 கோடியாகும். இதில், அதிகப்பட்சமாக சமாஜ்வாதி கட்சியின் வருமானம் ரூ.47.19 கோடி.
இதற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தின் எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பிடித்துள்ளது. 2017-18-ல் திமுகவின் வருமானம் ரூ.35.748 கோடியாகும். இது 37 கட்சிகளின் மொத்த வருமானத்தில் 15.07% . சென்ற ஆண்டை விட இந்த நிதியாண்டில் திமுகவின் வருமானம் 845% அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆனால், ஆளும் மாநிலக் கட்சியான அதிமுகவின் வருமானம் இதற்கு முந்தைய நிதியாண்டை விட 2017-18-ல் 74 சதவீதம் குறைந்துள்ளது.
திமுகவிற்கு அடுத்த இடத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 27.27 கோடி உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த முதல் மூன்று கட்சிகளின் வருமானம் மட்டுமே 110.21 கோடி.
மாநிலக்கட்சிகள் நன்கொடைகள், வங்கியில் கிடைக்கும் வட்டி, உறுப்பினர் கட்டணம் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றனர். இதில், உறுப்பினர் கட்டணம் மூலம் மட்டுமே கட்சிகள் 86 கோடியை வருமானமாக பெற்றுள்ளனர்.
மாநிலக் கட்சி செய்த செலவு விவரங்களில், சமாஜ்வாதி கட்சி 34 கோடியும், திமுக 27.47 கோடியும், TDP 16 கோடியும் செலவிட்டு உள்ளனர்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மாநிலக் கட்சிகள் இருந்தாலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களின் வருமான விவரங்கள் தொடர்பான ” IT Returns ” தாக்கல் செய்த கட்சிகளின் விவரங்களை வைத்தே ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு உள்ளனர்.