This article is from Oct 28, 2018

கடை & நிறுவனங்களில் ஊழியர்கள் அமரலாம் : கேரளாவில் அவசர சட்டம்.

பரவிய செய்தி

துணிக்கடை, நகைக்கடை போன்ற இடங்களில் வேலை பார்ப்பவர்கள் நின்று கொண்டே வேலை பார்த்து வருகின்றனர். இதில், பணியில் உள்ளவர்களுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்காவிட்டால் நிறுவனங்கள், கடைகளுக்கு 2 லட்சம் வரை அபராதம் என கேரளா அரசு புதிய சட்டம்.

மதிப்பீடு

சுருக்கம்

கேரள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 1960 சட்டத்தில் புதிய சட்ட திருத்தத்தை ஆளும் அரசு கொண்டு வந்துள்ளது. அதில், “ Right to sit “ அமரும் உரிமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

விளக்கம்

நாகரீகமான உடை, பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றத்தில் பல்வேறு நிறுவனங்கள், குறிப்பாக துணிக்கடை, நகைக்கடைகள் போன்றவற்றில்  பணிபுரிபவர்கள் 10 மணி அல்லது 12 மணி நேரம் நின்றுக் கொண்டே பணியைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். சிறிது இடைவெளி கிடைத்தால் அமர முடியாதா என பலரும் ஏங்குவதுண்டு.

வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் கூட பணியாளர்கள் அமர்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. நிறுவனங்களில் அமர்வதற்கான உரிமையைக் கூட போராடித் தான் பெற வேண்டிய கட்டாயம் உருவாகியது. அவ்வாறான போராட்டம் கேரளாவில் நடைபெற்று உள்ளது. இதைத் தொடர்ந்து பணியாளர்களுக்கான சட்ட திருத்தத்தையும் கேரள அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்தாண்டு கேரளாவில் ஒரு நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் “ Right to sit “ என போராட்டத்தை மேற்கொண்டனர். அதில், 10 மணி நேரம் தொடர்ச்சியாக நின்றுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்நேரத்தில் வாடிக்கையாளர்கள் இல்லாத போதும் அமரவோ அல்லது இடைவேளை நேரத்தில் அமரவோ அனுமதிப்பதில்லை எனக் குறிப்பிட்டு அமர்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் எனப் போராடினர்.

தற்போது கேரளா கடைகள் மற்றும் நிறுவனங்கள் 1960 சட்ட விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் ஊழியர்களுக்கு அமரும் உரிமை வழங்கும் சட்ட திருத்தத்தை அமல்படுத்தி பிரகடனப்படுத்தியது கேரள அரசு. “ The kerala shops and Establishments Ordinance 2018 “ என்ற தலைப்பிலான அவசரச் சட்டம் கேரளா ஆளுநரால் பிரகடனப்படுத்தி அக்டோபர் 4-ம் தேதி அரசிதழில் வெளியாகியது.

அவசர சட்ட திருத்தத்தின் படி கேரளாவில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியில் உள்ளவர்களுக்கு கட்டாயம் இருக்கைகள் ஏற்படுத்தி தர வேண்டும். சென்ற ஆண்டே இதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அபராதம் :

குறிப்பாக துணிக்கடை, நகைக்கடை போன்றவற்றிலேயே ஊழியர்களுக்கு அமர அனுமதி அதிகம் மறுக்கப்படும். ஆகையால், சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விதிகளை முதல் முறை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய் ஆகவும், இரண்டாம் முறை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை 10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது “.

கேரள அரசின் சட்டத் திருத்தத்தில் பெண் ஊழியர் பாதுகாப்பு உள்ளிட்ட ஊழியர்களுக்கு நன்மையளிக்கும் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கேரளாவில் கடை மற்றும் நிறுவனங்களில் பணிப் புரிபவர்களுக்கு அமரும் உரிமை வழங்கும் சட்ட திருத்தத்தை அம்மாநில அரசு கொண்டு வந்தது போன்று பிற மாநிலத்திலும் அமல்படுத்தி பணியாளர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader